ஹக்கீமிற்கெதிரான முறைப்பாடு. வை எல் எஸ் ஹமீட்
ஹிஸ்புல்லாஹ் சஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். எனவே, அவரும் ஒரு பயங்கரவாதி அல்லது சஹ்ரானின் பயங்கரவாதத்திற்கு துணைபோனவர்; என்ற ஒரு பிரச்சாரம் இனவாதிகளால் அப்போது முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு ஹிஸ்புல்லாவைக் காட்டிக் கொடுத்தவர்களும் நம்மவர்கள்தான் என்பதும் ஒரு கசப்பான உண்மை.
இவ்விடயத்தில் தெரிவுக்குழுவிலும் ஏனைய விசாரணைகளிலும் நடந்தவைகளை ஹிஸ்புல்லாஹ் விபரித்திருந்தார். அதில் தேர்தல் காலத்தில் அவர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடந்த ஒரு சம்பவம் அது; இதில் மு கா உட்பட பல கட்சிகள் பங்குபற்றியிருந்தன; என்பதை ஹக்கீமின் முன்னால் தெரிவுக்குழுவிலேயே விபரித்திருந்தார்.
அதேநேரம் பொலிஸ் விசாரணையில் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஹிஸ்புல்லாஹ் விடுவிக்கப்பட்டார். அதாவது சஹ்ரான் ஒரு பயங்கரவாதியாக அறியப்படாதிருந்த நேரமது. தேர்தல் காலத்தில் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக பல குழுக்களையும் சந்திப்பது, அவர்களுடன் உடன்பாடுகள் செய்வது இயல்பானது; என்பதை விசாரணையாளர்கள் ஏற்றுக்கொண்டதை அது காட்டியது.
அதே அடிப்படையிலேயே மு கா வும் சந்தித்திருந்தது. அது அப்பொழுதே தெரிவுக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. அதன் யதார்தத்தன்மை புரிந்ததன் காரணமாக யாரும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு தேர்தல் சமயத்தில் அது மீண்டும் தூக்கிப் பிடிக்கப்படுவதேன்? இது மிகப்பிரதானமான கேள்வியாகும்.
இன்று சஹ்ரானை சந்தித்ததாக முறைப்பாடு செய்திருப்பவர்கள், அவ்வாறு சந்தித்தது குற்றமென்றால் ஏனைய தரப்புகளை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மட்டும் முறைப்பாடு செய்ததேன்?
அரசியல் சதி:
சில வேட்பாளர் தரப்புகள் தனி சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றிபெற வேண்டும்; என்று பலவிதமான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள். ஆனாலும் தற்போதைய களநிலவரம் அதற்கு சாதகமாக இல்லை; என்பதை தற்போது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அநுர, மகேஷ் சேனாநாயக்க போன்றவர்கள் களத்தில் குதித்தது; சமன்பாட்டை மாற்றியிருக்கிறது.
மறுபுறம், அடுத்த தரப்பு கூட்டங்களுக்கு கூடும் சனத்திரள், தாம் நினைத்தது; போன்ற ஒரு பாரிய விகிதத்தில் சிங்கள பௌத்த வாக்குகள் தமக்குக் கிடைக்கப்போவதில்லை; என்ற யதார்தத்தையும் உணர்த்தியிருக்கின்றது. இந்நிலையில் இரண்டு உத்திகள் பாவிக்கப்படுகின்றன. ஒன்று, சிறுபான்மை வாக்குகளைக் கவருவது அல்லது சிதறடிப்பது; இரண்டு, பௌத்த வாக்குகளை மேலும் கவருவது.
பௌத்த வாக்குகளைக் கவருகின்ற விடயத்தில் தாமே நேரடியாக இனவாதத்தை கக்குவது இச்சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமல்ல. எனவே, முஸ்லிம்களுக்குள்ளிருந்தே இதற்கான ஒரு சாதகசூழ்நிலையை உருவாக்க முடியுமா? என்ற ஒரு முயற்சியாக இது இருக்கலாம்.
இன்று முஸ்லிம் தலைவர்களில் ஒரு சில முஸ்லிம் தலைவர்களை இனவாதிகளாக சிங்கள மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே முத்திரை குத்திவிட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கு பொதுமேடைகளில் கூட ஏறமுடியாத நிலை.
இவர்களில் எஞ்சி இருப்பது ஹக்கீம் மாத்திரமே. இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஹக்கீமின்மீது வெறுப்புக்கொண்ட பலர் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சிலர் அடுத்த தரப்பை ஆதரிப்பதற்கு இந்த முஸ்லிம் தலைமைகளிலுள்ள வெறுப்பும் ஒரு காரணம்; குறித்த வேட்பாளரிலுள்ள நல்லபிப்பிராயம் என்பதற்குப்பதிலாக.
இந்த முஸ்லிம் தலைவர்கள்மீது இவர்களுக்கு இருக்கின்ற ஆத்திரம் நியாயமானதே! உண்மையில் தமது முட்டில் தங்கியிருந்த இந்த ஆட்சியில் இவர்கள் மனசு வைத்திருந்தால் முஸ்லிம்களின் 90 வீத பிரச்சினைகளையாவது தீர்த்திருக்கலாம். மட்டுமல்ல, முஸ்லிம்களின் முட்டில்தான் தங்கியிருக்கின்றோம்; என்கின்ற உணர்வு இந்த ஆட்சியாளர்களுக்கு இருந்திருந்தால் இவ்வாட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பல அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
ஏன், திகன கலவரம் ஐந்து நாட்கள் நீடித்திருக்காது; என்பதைவிட அது இலகுவாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அரசுக்கு முஸ்லிம்களின், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு என்பது “ சும்மா ஓசியில்” கிடைப்பதுதானே என்கின்ற ஆட்சியாளர்களின் எண்ணம்தான் அவர்கள் பாராமுகமாக செயற்பட்டதற்கான காரணம்.
உண்மையில் இந்த முஸ்லிம் சமூகத்தின் ஆணைபெற்ற முஸ்லிம் தலைமைகள் தம்கடமைகளை இந்த ஆட்சியில் செய்யத்தவறிய, முஸ்லிம்களின் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறிய குற்றத்திற்கு இவ்வுலகில் தப்பினாலும் மறுமையில் தப்பமுடியுமா? என அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பாரிய அமானிதத்தை அவர்கள் பாழ்படுத்தவில்லையா? என அவர்கள் சிந்திக்க வேண்டும்.
எனவே, இவர்கள் மீதான பலரின் கோபம் நியாயமானதுதான். அதற்காக இன்று இவர்கள் செய்திருக்கின்ற கைங்கரியம் ஹக்கீமைப் பழிவாங்குவதாக நினைத்து ‘சமூகத்திற்கு’ செய்த அநியாயமாகும்.
இன்று யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஹக்கீமிற்கு ஓரளவு ஏற்புடமை இருக்கின்றது. ஏனைய முஸ்லிம் தலைவர்கள்மீது இருக்கின்ற வெறுப்பு ஹக்கீம்மீது இல்லை. அவரை ஒரு மிதவாதத்த தலைவராக சிங்கள மக்கள் பார்க்கிறார்கள்.
இந்நிலையில் இவ்வாறான அர்த்தமற்ற முறைப்பாடுகள்மூலம் சட்டரீதியாக, ஹக்கீமிற்கு பாதிப்பேதுமில்லாதபோதும் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஹக்கீம் மீதும் ஒரு வெறுப்பும் ஏற்புடமை இல்லாத ஒரு நிலையும் ஏற்படலாம். அந்த சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் ஒரு இணைப்பாக செயற்பட ஒரு தலைமை இல்லாமல் போகலாம்; என்பது மாத்திரமல்ல, இன்று ஓரளவு நல்லபிப்பிராயம் உள்ள ஒரு முஸ்லிம் தலைவர்மீதும் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுமாயின் அது முஸ்லிம்கள் மீதான வெறுப்பை இன்னும் அதிகமாகவாக்கவே செய்யும்.
இன்று முஸ்லிம்கள்மீது சிங்களவர்களுக்கு இருக்கின்ற கணிசமான வெறுப்பிற்கு சில முஸ்லிம் தலைவர்களின் கடந்தகால செயற்பாடுகளும் ஒரு காரணம்; என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அவ்வாறு முஸ்லிம்களின் மீது ஏற்படுகின்ற வெறுப்பு அடுத்த தரப்பிற்கு அதிக சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கலாம். ஆனால் அது முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள மக்களின் அதிகரித்த நிரந்தர வெறுப்புக்கு காரணமாகிவிடும்.
எங்களுக்கு ஹக்கீமுடன் பல முரண்பாடுகள் இருக்கலாம்; இருக்கின்றன. ஆனாலும் இன்றைய யதார்த்தம் முஸ்லிம் கட்சிகளுக்கு மத்தியில் அதிக பட்சமுஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையாக அவர் இருக்கின்றார். அவரை அந்நிலையில் இருந்து முஸ்லிம்கள் விரும்பினால் கீழே இறக்கலாம். அதற்காக நியாயமான முறையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம். அவையெல்லாம் ஜனநாயக உரிமை.
அதற்காக பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் பொய்யாக, “ அவரை ஒரு பயங்கரவாதியாக, அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவானவராக” காட்டமுற்படுவது முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களே வெட்டுகின்ற குழியாகும்.
எனவே, குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக ஹக்கீமிற்கென நினைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு இந்த அநியாயத்தைச் செய்யாதீர்கள்.
0 comments :
Post a Comment