Thursday, October 3, 2019

வௌிநாடு செல்ல கோட்டாபயவிற்கு அனுமதி

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வௌிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவர் வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

கடந்த வழக்கு தினத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது கட்சிக்காரர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட திர்மானித்துள்ளதால் அதனுடன் தொடர்புடைய வேட்புமனு தாக்கலின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக தற்போது நீதிமன்ற பொறுப்பில் உள்ள அவரின் வௌிநாட்டு கடவுச் சீட்டை விடுவிக்குமாறு கோரியிருந்தார்.

அதேபோல், தனது கட்சிக்காரர் அண்மையில் சிங்கப்பூரில் இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி அதனுடன் தொடர்புடைய வைத்திய பரிசோதனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை வௌிநாடு செல்ல வேண்டியுள்ளதாக கடந்த வழக்கு தினத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்காக தற்போது நீதிமன்ற பொறுப்பில் உள்ள அவரின் வௌிநாட்டு கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயண தடையை குறித்த காலப்பகுதிகளில் நீக்குமாறும் உத்தரவிடுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலிப பீரிஸ், கோட்டாபயவின் குறித்த கோரிக்கைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பிரதிவாதிக்கு குறித்த காலப்பகுதியினுள் வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படுவதாக உத்தரவிட்ட மூவரடங்கிய நிதிபதிகள் குழாம், இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டது.

அதேபோல், நீதிமன்ற பொறுப்பில் உள்ள அவரது வௌிநாட்டு கடவுச்சீட்டை விடுவிக்குமாறும், அவர் வௌிநாடு சென்று நாடு திரும்பியதும் நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குழாம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment