மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக நோர்வேயில் இருந்து இறக்கப்பட்டவராம் ஞானசார தேரர் !!
சு. க. வின் காரைதீவு முஸ்லிம் அமைப்பாளர் ஜாஹிர்
மஹிந்த் ராஜபக்ஸ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக நோர்வேயில் இருந்து ஞானசார தேரர் இறக்கப்பட்டார், மேற்குலகின் சதி திட்டத்துக்கு முஸ்லிம்கள் பலியாகி எதிராக வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்ஸ 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைய நேர்ந்தது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச முஸ்லிம் அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான ஏ. எம். ஜாஹிர் தெரிவித்தார்.
இவரின் மாளிகைக்காடு இல்லத்தில் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை மதியம் நடத்தப்பட்ட பொது கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
இந்நாட்டில் மூன்று தசாப்தங்களாக கொடூர யுத்தம் நிலவியது. அதில் எமது சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நமது சமூகத்தை மாத்திரம் அன்றி இலங்கை மக்கள் அனைவரையும் யுத்த அரக்கனின் பிடியில் இருந்து மீட்டு தந்த பெருமைக்குரிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஆவார். நிலையான நீடித்த அபிவிருத்திகளை மேற்கொண்ட ஒரே தலைவரும் இவரே ஆவார். நாம் முஸ்லிம்கள். நன்றி உடையவர்கள். ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஏதோ சில காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கவே இல்லை.அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ சுமார் நான்கரை இலட்சம் வாக்குகளால் தோல்வி அடைந்தார். அவருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க தவறியது வரலாற்று தவறாகும்
.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு நாலரை வருடங்கள் கழிந்து விட்டபோதும் நாட்டில் எங்குகூட அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, வாழ்வாதார ஊக்குவிப்பு எவையும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறவே இல்லை. பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகள் தருவதாக வாக்களித்தார்கள்.மட்டக்களப்பில் இருந்து அம்பாறை அல்லது பொத்துவில் வரை ரயில் பாதை அமைத்து தருவார் என்று அமைச்சர் தயா கமகே மேடைகளில் முழங்கினார். வை ஃபை இலவசமாக தருவதாக சொன்னார்கள்.ஆனால் எவையும் நடக்கவே இல்லை. இலங்கையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எத்தனையோ பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு உள்ளன. கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை, பொத்துவில், ஒலுவில் என்று ஒவ்வொரு இடங்களிலும் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இந்நாட்டில் கிடையாது என்பது போல அரசாங்கம் நடக்கின்றது.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தர முயலாமல், அதற்கான உத்தரவாதங்களை பெறாமல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய கட்சிக்கு வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியில் தேர்தல் கேட்டால்தான் ரவூப் ஹக்கீம் கண்டியிலும், றிசாத் பதியுதீன் வன்னியிலும் எம். பியாக வர முடியும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காகவே உடன்படிக்கை எதுவும் செய்யாமல் இவர்கள் ஐ. தே. கவை ஆதரிக்கின்றனர். முஸ்லிம்களை காட்டி கொடுத்து அழித்தாலும் பரவாயில்லை, சொந்த இருப்பை இவ்விதம் பாதுகாத்து கொண்டால் சரி என்று இப்படுபாதகமான ஈன செயலுக்கு துணிந்து விட்டனர்.
மஹிந்த் ராஜபக்ஸ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக நோர்வேயில் இருந்து ஞானசார தேரர் இறக்கப்பட்டார். முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. யுத்தத்தை முடிவுறுத்திய மஹிந்த ராஜபக்ஸ மீது தமிழ் மக்களுக்கு பாரிய அதிருப்தி காணப்பட்டது. தமிழ் மக்களோடு சேர்ந்து முஸ்லிம்களும் எதிராக வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வி அடைந்தார். மேற்குலகின் சதி திட்டத்துக்கு முஸ்லிம்கள் பலியாகி எதிராக வாக்களித்ததால் மஹிந்த தோற்க நேர்ந்தது. நாம் மஹிந்த ராஜபக்ஸவால் நிறுத்தப்பட்டு உள்ள வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்குகளை அள்ளி வழங்குவதன் மூலம் கடந்த கால தவறை திருத்தி சரி செய்வதோடு எமது எதிர்காலத்துக்கான விடியலுக்கான பாதையையும் வகுத்து கொள்ள வேண்டும். கோத்தாபய ராஜபக்ஸவை தவிர பாதுகாப்பு செயலாளராக வேறு ஒருவர் இருந்திருந்தால் இந்நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது. ஆனால் இப்போது குடும்ப ஆட்சி என்று கூக்குரல் போடுகின்றனர். மஹிந்த ராஜபக்ஸ விட்டு சென்ற இடத்தில் இருந்து கோத்தாபய ராஜபக்ஸ அபிவிருத்திகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார்.
0 comments :
Post a Comment