Thursday, October 10, 2019

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய இராணுவத்தைக் கட்டியெழுப்புவதே எனது இலக்கு! சவேந்திர சில்வா

ஸ்ரீலங்கா இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவுவிழா இன்று (10) காலி முகத்திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு இன்றுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. அதன் நிமித்தம் ஒழுங்குசெய்யப்பட்ட விழா, இராணுவத் தளபதி லுதினன் ஜனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இன்று காலை காலி முகத்திடல் விளையாட்டுத் திடலில் இடம்பெற்றது.

அங்கு இராணுவத்தளபதி உரையாற்றும்போது, இராணுவத்தின் மிக முக்கியமானசெயற்பாடாக அமைவது நாட்டினதும் சமூகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதேயாகும். அதற்காக முழுமையாக பாடுபட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அவ்வாறு செயற்படுவதனூடாக பயம் மற்றும் சந்தேகமற்ற ஒரு சமுதாயம் உருவாகும் எனக் குறிப்பிட்டார். தற்போதைய உலகிற்கு ஏற்றாற்போல தற்போது நாட்டில் உள்ள சவால்களை ஆராய்ந்து, அவற்றுக்கு முகங்கொடுக்கத்தக்கவாறு பலம்பொருந்திய இராணுவத்தைக் கட்டியெழுப்புவதனூடாக இராணுவத்தை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதற்கு தான் முக்கிய கவனம் செலுத்திவருவதாகவும், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 70 ஆவது சேவைக் காலத்தினுள் முதன் முதலாக ஆண்டு நிறைவு விழாவுக்கு அமைவாக, 210 அதிகாரிகளுக்கும் பல்வேறு படிநிலைகளில் உள்ள அதிகாரிகள் 7000 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த அளவு பதவி உயர்வுகள் இரு மடங்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் எனவும் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் அனைத்து இராணுவனத்தினரும், அதிகாரிகளும் குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com