Tuesday, October 15, 2019

பயணிக்கும் வாகனம் இயந்திரக்கோளாறால் நின்றால். அடுத்த வாகனத்தில் ஏறுவது வழமை. ரெலோவிற்கு சிவாஜிலிங்கம் சவால்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம் குதித்திருப்பது அக்கட்சியின் தலைமைப்பீடத்திற்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டுவரும் ரெலோவினர் சிவாஜிலிங்கம் தமது கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவாஜிங்கம் தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கியுள்ளார். அவர் அங்கு தெரிவித்தமை வருமாறு.

அடுத்த மூன்று மாதங்களிற்கு ரெலோவின் சகல பொறுப்புக்களிலிருந்தும் விலகி, பெயரளவிற்கு மட்டுமே கட்சியில் இருக்கிறேன். இதற்கிடையில் கட்சி தனது விசாரணையை நடத்தி முடிக்கட்டும். கட்சியின் நடவடிக்கையை பொறுத்தே, கட்சிலிருந்து நிரந்தரமாக விலகுவதா என்ற முடிவை எடுப்பேன்.

கடந்த 12ம் திகதி ரெலோவின் யாழ் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், நான் போட்டியிட்டது சரியென்றுதான் கூறினார்கள். விந்தன் கனகரட்ணம் மட்டும்தான் எதிர்நிலைப்பாடு எடுத்தார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் அடுத்த நாள் நடைபெற்றது. அதில் 13 பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் ஜனாதிபதி தேர்தல் குறித்தும், நான் போட்டியிடுவது குறித்தும் ஆராய்ந்துள்ளார்கள்.

ஆனால், இதுவரை ரெலோவிடமிருந்து எனக்கு எந்த விளக்கம் கோரல் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான், என்னிடம் விளக்கம் கோரப்பட்டதாக அறிந்தேன்.

சிவாஜிலிங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக, ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்கும்படியும், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும்படியும் ஒரு தீர்மானத்தை தலைமைக்குழு எடுத்துள்ளது.

அதற்கு எனது பதில்தான், சங்கிலி மன்னனின் சிலைக்கு முன்பாக எனது தேர்தல் பிரசாரம் ஆரம்பித்தது. என்னுடைய பிரசார துண்டு பிரச்சாரத்தை வழங்கினேன்.

என்னிடம் விளக்கம் கோருவதென்ற விடயத்தை எப்படி ஊடகங்கள் வழியாக அறிந்து கொண்டேனோ, அதேபோல எனது நிலைப்பாட்டையும் ஊடகங்கள் வழியாக தெரிவித்துள்ளேன்.

நான் தேர்தலில் இருந்து விலக மாட்டேன், எனது பிரச்சாரங்கள் தொடரும் என்பதே அந்த செய்தி.

இந்த வாரம் 17ம் திகதி எனது பிரச்சாரம் ஆரம்பமாகும். கொழும்பு, மலையகத்திலும் பிரசாரம் நடக்கும்.

என்னிடம் விளக்கம் கோரி, அதில் திருப்தியடையாத பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கையெடுப்பதாகவும் ரெலோ தீர்மானித்துள்ளதாக அறிந்தேன்.

கட்டுப்பணம் செலுத்தவதற்கு முன்னர் என்னுடைய தவிசாளர் பதவி,தவிசாளர் மூலம் பெற்ற அரசியல் குழு, தலைமைக்குழு, மத்தியகுழுவிலிருந்து விலகுவதாக கட்சியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன்.

சாதாரண உறுப்புரமை மூலம் யாழ்ப்பாணம் மாவட்ட கிளையின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினராகவும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். அவர்கள் என்னை இடைநிறுத்தும் வரை அந்த பொறுப்புக்களில் இருப்பேன்.

கட்சியின் செயலாளர் என்னை யாப்புவிதிகளின்படி நீக்கலாம். தலைமைக்குழுவும் நீக்கலாம். ஆனால், நான் தேர்தலில் குதித்தமைக்கான காரணங்கள், அவர்களை நடவடிக்கையெடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

நான் அவர்களிற்கு மேலும் சங்கடங்களை ஏற்படுத்தாமல், சுயாதீன விசாரணையை அவர்கள் நடத்த விரும்பினால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக யாழ் கிளை பொதுக்குழு, செயற்குழு, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகும் கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு நேரிலோ வேறு வழிகளிலோ கையளிப்பேன்.

இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன். அவர்கள் இடைநிறுத்தாவிட்டாலும் மூன்று மாதங்களிற்கு கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்குபற்றாமல், பெயரளவிற்கு சாதாரண உறுப்பினராக இருப்பேன். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்து, நிரந்தரமாக விலகுவதா என்பதை தீர்மானிப்பேன்.

நான் 46 ஆண்டுகள் இந்த விடுதலை இயக்கத்தில் (ரெலோ) செயற்பட்டவன். தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை, பிரபாகரன் முன்னிலையில் இந்த விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டவன். என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பங்குகாலம் ரெலோவுடனும், தமிழ் தேசிய இயக்கத்துடனும் பயணித்திருக்கிறேன். கனத்த இதயத்துடன்தான் இந்த முடிவை எடுத்தேன்.

மக்களுடைய அபிலாசைகளிற்காக போராடுவதுதான் எனது முதலாவது விடயம். இதில் நாம் பயணிக்கிற வாகனத்தை போலத்தான் நான் சார்ந்த இயக்கமும், கட்சியும். இயந்திர கோளாறால் வாகனம் நின்றால் நாம் வேறு வாகனத்தில்தான் ஏறி செல்ல முடியும்.

அல்லது வாகனம் வேறு திசையில் சென்று, நாம் வேறு திசையில் செல்ல வேண்டுமென்றால், நாம் அதிலிருந்து இறங்கி நடந்தாவது செல்ல வேண்டும். இதைத்தான் நான் செய்தேன்.

ரெலோவின் தலைமைக்குழுவிற்கு ஊடகங்கள் வாயிலாக சொல்லும் பதில் இதுதான். எனக்கு ஏதாவது கடிதங்கள் கிடைத்தாலும், நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

No comments:

Post a Comment