கோட்டாபயவுக்கு எதிரான குடியுரிமை மனு தள்ளுபடி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று காலை 9.30 மணியளவில் மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குடியுரிமை சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு இரட்டை குடியுரிமை வழக்கும் அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கே காணப்படுவதாக தெரிவித்தார்.
எனினும், 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படாத நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு கீழ் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இரட்டை குடியுரிமை வழங்கும் போது குடியுரிமை சட்டத்திற்கு அமைய குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு எவ்வித பணிகளும் வழங்கப்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
பிரதிவாதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் போலியானவை என மனுதாரர்கள் நீதிமன்றில் தெரிவித்திருந்தாலும், அவை முழுவதுமாக உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நிதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்த நீதிபதிகள் குழாம் மனு தொடர்பாக சகல தரப்பினரும் தங்களது ஆவணங்களை இன்று (04) பிற்பகல் 3.15 க்கு முன்னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவித்திருந்ததது.
மேலும், குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று (04) மாலை 6 மணிக்கு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு குறித்த மனுவை ஏகமனதாக நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.
பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடியுரிமை தொடர்பான முறையான சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அதன் காரணமாக குறித்த பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த பத்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வௌியிடுமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment