பலாலி விமான நிலையமானது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமன சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விமான நிலையமாக இருந்து வந்த பலாலி விமான நிலையமானது, பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தலைமையின்கீழ் இதற்கான அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டது.
இவ்விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 10ஆம் திகதியளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ். சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராக உத்தியோகபூர்வமாக திறப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின்சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீடு (ICAO CODE) VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீடு (IATA) JAF ஆகும். இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், அதன் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீடு VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீடு BTC என்பதாகும்.
கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீடு VCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீடு RML ஆகும்.
இவ்வாறு பெயரிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே அவையாகும்
No comments:
Post a Comment