காமினிகளே யாழ் நூலகத்தை எரித்தார்கள். போட்டுடைக்கின்றார் அனுரகுமார
யாழ் நூலகத்தை காமினிகளே எரித்தார்கள் என்றும் அதற்காக அவர்கள் தெற்கிலிருந்து ஒரு ரயில் நிறைய காடையர்களை இந்த பூமிக்கு அழைத்துவந்தார்கள் என்றும் ஜேவிபியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவ்வாறு செயற்பட்ட காமினிகள் யார் என்றும் குறிப்பிட்டார். காமினி திஸாநாயக்க , காமினி ஜயவிக்கரம பெரேரா ஆகியோரே அந்த விடயத்திற்கு தலைமை தாங்கியதாகவும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர், இன்றும் இங்குள்ள மக்கள் நூல் நிலையங்களுள் நுழையும்போது பாதணிகளை கழட்டி விட்டு உள்ளே நுழைவதை அவதானிக்கின்றேன். இவ்வாறு வாசித்தலுக்கு கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த சமூகத்திற்கு அரசியல்வாதிகள் என்ன செய்துள்ளார்கள்?
1981 இல் அபிவிருத்தி சபை தேர்தலில்போது அவர்களது பலத்தை வெளிக்காட்டாத ஒரு துளிநிலம் கூட இந்த மண்ணில் இருக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் நினைத்தனர். யாழ் தேவி ரயில் தெற்கிலிருந்து காடையர்களை நிரப்பி கொண்டுவந்தனர். இதை செய்தவர்கள் காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் காமினி திஸாநாயக்கவும். யாழ்பாணத்தின் சில வாக்கு பெட்டிகள் பன்னலை பொலிஸ் நிலையத்தில் நிரப்பப்பட்டது.
எனவே யாழ் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்பப்போவது கல்வியின் ஊடாகவே. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கல்வி விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவோம்.
இனவாதத்தை பரப்பும் எந்த அரசியல்வாதியின் பிள்ளைகளும் யுத்தத்தில் உயிரிழக்கவில்லை
முதலாவது தேவை இனவாதத்தை புறக்கணிப்பதாகும். எந்தவொரு இவாதத்திற்கும் நாம் இடமளிக்க கூடாது. இனவாதம் ஒரு அரசியலாகி விட்டது. அது ஒரு யுத்தத்தை உருவாக்கியது.
இந்த முப்பது வருட யுத்தத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, பிரதிநிதித்துவப்படுத்துவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா?
வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டியது யார்? அரசியல்வாதிகள். ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது யார், வடக்கிலும் தெற்கிலுமுள்ள சாதாரண மக்கள்தான். அதனால் மீண்டும் இனவாதத்திற்கோ, அடிப்படை வாதத்திற்கோ நாம் சந்தர்ப்பத்தை வழங்க மாட்டோம் என்றார்.
0 comments :
Post a Comment