Monday, October 28, 2019

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் வெளியிடப்படவுள்ளது. முதல் பிரதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டியில் வெளியிடப்பட உள்ளது.

கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள நிகழ்வில், அவருடைய தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெறும் என தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு குழுவின் தலைவர் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகள, கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளிடம், சஜித் பிரேமதாச அவர்களினால் 31 ஆம் திகதி காலையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இம்முறை 2015 ஆம் ஆண்டில் பெரும்பான்யைமான முற்போக்கு, புத்தாக்க முயற்சியுடைய நாட்டின் பெண்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பிரஜைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து உருவாக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் இதுவாகும் என அமைச்சர் மங்கள குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

"ராஜபக்ஷக்களின் தேவதைக் கதைகளைப் போன்றல்லாது, நாம் இம்முறையும் சொல்வதை செய்வோம். நாம் எமது தேர்தல் விஞ்பானத்தை எதிர்வரும் 31ம் திகதி கண்டியில் வெளியிட உள்ளோம்.

ராஜபக்ஷக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் தமது தேர்தல் விஞ்ஞாபனம் வித்தியாசமானது, நான் ராஜபக்ஷக்களின் அண்மைய தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி மட்டும் பேசவில்லை 2005 மற்றும் 2010ம் ஆண்டிலும் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சொல்வதை அவர்கள் செய்தது கிடையாது, சொல்வது ஒன்று அவர்களினால் செய்யப்படுவது வேறொன்று.

2005ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாக கூறினார்கள். சம்பள அதிகரிப்பு செய்வதாகவும் மக்களுக்கு போசாக்கு பொதியொன்றை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தனர்.

எனினும், உறுதியளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டு, சர்வாதிகார ஆட்சியொன்றை மேற்கொள்வதற்கே ராஜபக்ஷ தரப்பு முயற்சிக்கின்றது. குடும்ப ஆட்சியை நிறுவிக் கொள்ளக்கூடிய, இழிவான சர்வாதிகார தீர்மானங்களையே எடுத்திருந்தனர்.

எனினும், நாம் 2015 ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளில் 80 வீதமானவை பூர்த்தி செய்துள்ளோம். இம்முறையும் நாம் சொல்வதை செய்வோம்.

இம்முறை மிகச் சிறந்த தேர்தல் விஞ்ஞாபனமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment