மலேசியாவில் கைது செய்யப்பட்ட பன்னிருவர் மீதான விசாரணைகள் நிறைவு. நாளை மன்றில் நிறுத்தப்படுகின்றனர்.
பயங்கரவாத அமைப்பாக மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உள்பட 12 பேர் மீது நாளை செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.
இவர்கள் அனைவரையும் நாளை காலை 8.30 மணி அளவில் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இவர்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையினை மலேசிய பயங்கரவாத தடுப்பு பொலிஸார் சட்டத்துறை தலைவரிடம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த அறிக்கையின் மீது போலீஸ் துறை திருப்தி அடைந்திருப்பதாக புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் துணைத் தலைவர் அயோப்கான் மைடின் பிச்சை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 23ஆம் தேதி, புதன்கிழமை அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தாங்கள் சட்டத்துறைத் தலைவரின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் பத்திரிகையாளர்கள் மைடின் பிச்சையிடம் கேட்டபோது, நேற்று தீபாவளி தினத்தின்போது, தடுத்து வைக்கப்பட்டோரின் குடும்பத்தினர் , காலை 9லிருந்து மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப் பட்டனர். தடுத்து வைக்கப்பட்டோரில் சிலர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கடுமையான நோய் பிரச்சினை எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.
இதேநேரம் விசாரணை அறிக்கையை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் தாங்கள் ஒப்படைத்து விட்டதாக போலீசார் அறிவித்துவிட்டதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஜ.செ.கவின் சட்ட விவகாரப் பிரிவின் தலைவர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.
சொஸ்மா சட்டத்தின்கீழ் ஒருவரை 28 நாட்களுக்கு தடுத்து வைக்க முடியும் என்றாலும் விசாரணை முடிந்துவிட்டதாக போலீஸ் அறிவித்து விட்டதால் அவர்களை தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என ராம் கர்ப்பால் கூறுகின்றார்.
போதுமான ஆதாரம் இருந்தால் அவர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டும்படி அவர் கேட்டுக்கொண்டார் இதன்வழி அவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியும் என்றும் சுட்டிக்காட்டும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினரும் காடேக் சட்டமன்ற உறுப்பினருமான ஜி சாமிநாதன் மற்றும் சிரம்பான் சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் ஜாமினில் விடுவிக்கப்பட வேண்டும் என ராம் கர்ப்பால் தெரிவிக்கின்றார்.
0 comments :
Post a Comment