ஜனாதிபதி தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் விட்ட தவறை இம் முறையும் விட முடியாது எனவும் முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றோம் என்று கூறிய போது எமது தமிழ் மக்களும் அவர்களுக்கே வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினோம். இம் முறையும் நாம் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளிக்காவிட்டால் எமக்கு தேவையற்ற ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிடுவார்.
கடந்த காலங்களில் நாங்கள் பல தவறுகள் இழைத்திருக்கின்றோம். ஏன் என்றால் கடந்த காலத்தில் நாங்கள் வாக்களித்தவர்கள் வந்தால் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டும் எமது பல வருட தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அர்த்தம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் மக்கள் அனைவரும் வாக்களித்தோம். ஆனால் அவை நடந்தனவா என்றால் அவை கேள்வி குறியாகவே உள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விடயம், விடுவிக்கப்பட்டாத தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி தொடர்பான விடயங்கள், அரசியல் சீர்திருத்தம் இது தவிர அடிப்படை உரிமை எமது எதிர்கால சந்ததி கெளரவமாக வாழக்கூடிய சட்டங்களை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு ரீதியான உறுதி இவ்வாறான விடயங்களை வலியுறுத்தி கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் அவை அனைத்தும் தொடர்பாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்போ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடமோ எழுத்து மூலமான எதாவது உடன்படிக்கையை செய்திருக்கின்றார்களோ என்றால் அதுவும் கேள்வி குறியாகவே உள்ளது.
இம் முறை அதே தவறை விட முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் என நம்புகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment