Sunday, October 27, 2019

பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் 436... பதிவு செய்யப்படாத தெளஹீத் ஜமாஅத் பள்ளிகள் 16....

436 முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என அத்திணைக்களத்தின் பணிப்பாளர் மாெஹமட் ரிபாய்தீன் மொஹமட் மலிக் வழங்கிய தகவலின்படி தெளிவாகின்றது என குற்றவியல் விசாரணைத் திணைக்களம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தகவல் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில்பதிவுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவால்கள் 2599 உள்ளதெனவும், அதில் 80 அளவில் தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் நிருவாகத்தின் கீழ் இயங்குவதாகவும் அத்திணைக்களம் உறுதிசெய்துள்ளது எனவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆய்வறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்படாத முஸ்லிம் பள்ளிகள் 951 மற்றும் பதிவு செய்யப்படாத தெளஹீத் பள்ளிவாசல்கள் 16 என்பன உள்ளன எனவும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் நீதிமன்றில் குறிப்பிட்டது. திருகோணமலை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் 2017.09.27 அன்று இஸ்லாமிய அமைப்புக்களைப் பதிவுசெய்வதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு ஆணை பிறப்பித்ததாகவும் அதன்பின்னர் அவ்வாறான எந்தவொரு அமைப்புக்களும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் தகவல் மூலம் தெளிவாகின்றது எனவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் தெரிவித்தது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில், சென்ற ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின்படி இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் குற்றவியல் விசாரணைகள் திணைக்களம் மேலும் தெரிவித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com