மலேசியாவில் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தமை மற்றும் அவர்களது சின்னங்கள் மற்றும் இறுவெட்டுக்களை தமது உடமைகளில் வைத்திருந்தமை தொடர்பில் அந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இருவர் உட்பட பன்னிருவர் கைது செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயமாகும்.
குறித்த பன்னிருவரும் இன்று மேலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவேறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர்கள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக தலையசைத்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் 30-40 வருட சிறைத்தண்டனையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளனர்.
மலேசியச் செய்திகள் இவ்வாறு தெரிவிக்கின்றது.
கோலாகங்சார் நீதிமன்றத்தில் அரவிந்தன் -பாலமுருகன் மீது குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான அம்சத்தை கொண்ட ஆவணங்களை வைத்திருந்தது தொடர்பில் கூலிமைச் சேர்ந்த 27 வயதுடைய அரவிந்தன் மற்றும் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த டாக்சி டிரைவர் வி. பாலமுருகன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கும் இரவு 11 45 மணிக்கிடையே சுங்கை சிப்புட் கிளையைச் சேர்ந்த கோலாகங்சார் நகராண்மைக் கழக மண்டபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரவிந்தன் ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் 130J (1) (a)விதியின் கீழ் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை அல்லது கூடிய பட்சம் 30 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
அதே நாளில் சம்பந்தப்பட்ட அதே இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக டாக்சி டிரைவரான வி . பாலமுருகன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் பாலமுருகனுக்கு எதிராக இதர மூன்று குற்றச்சாட்டுக்களும் கொண்டு வரப்பட்டன.
பயங்கரவாதம் தொடர்பிலான ஆவணங்களை வைத்திருந்தது அதாவது கைத்தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பயங்கரவாத நடவடிக்கை அம்சங்களுக்கான ஆவணங்களை கொண்டிருந்ததாகவும் பாலமுருகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. தண்டனைச் சட்டத்தின் 130JB (1) (a)
விதியின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி காலை மணி 9.40 அளவில் சுங்கை சிப்புட் டாக்சி வளாகத்தில்
அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்வதையும் இந்த சட்டவிதி வழி வகை செய்கிறது.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்களை காட்டியதாகவும் அவர்மீது மூன்றாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. இது தவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பயங்கரவாத நடவடிக்கை அம்சங்களைக் கொண்ட ஆவணங்களை காட்சிக்கு வைத்திருந்த நான்காவது குற்றச்சாட்டும் அவர் மீது கொண்டுவரப்பட்டது.
அரவிந்தன் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ். என் ராயர்,பாலமுருகன் சார்பில் வழக்கறிஞர் மேத்யூஸ் ஜூட் மற்றும் வழக்கறிஞர் பர்ஹான் பாட்ஷிலும் ஆஜராகினர்.
2012 ஆம் ஆண்டில் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் 13-வது விதியின் கீழ் அரவிந்தன் மற்றும் பாலமுருகனுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டதால் அவர்களுக்கு அரசு தரப்பு ஜாமீன் வழங்கக் கூடாது என ட்அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரொஹாய்டா குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் அனுமதி மறுப்பதாக தெரிவித்தார்.
அதோடுகுற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் நவம்பர் 28ஆம்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் பெறுவதற்காக ஈப்போ உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு – சாமிநாதன், குணசேகரன், சந்துரு மீது குற்றச்சாட்டு
ஜ.செ.க.வின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி. சாமிநாதன், நெகிரி செம்பிலான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் மற்றும் மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் அதிகாரி எஸ். சந்துரு ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி இரவு 8 .30 மணிக்கும் 10.50 மணிக்குமிடையே மலாக்கா தாமான் ஆயர் கெரோ ஹைட்ஸில் , ஆயர் கெரோ டேவான் கஸ்தூரியில் 34 வயதுடைய சாமிநாதன், 60 வயதுடைய குணசேகரன், 38 வயதுடைய சந்துரு ஆகியோர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
இவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஆயுட்கால தண்டனை அல்லது கூடிய பட்சம் 30 ஆண்டுகள் சிறை , அபராதம் மற்றும் குற்றம் புரியும் நோக்கத்தோடு சொத்துக்களையும் பயன்படுத்தி இருந்தால் அவற்றை பறிமுதல் செய்வதை வழிவகுக்கும் குற்றவியல் சட்டத்தின் 130 J (1) (a)jவிதியின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் தனது கைத்தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை அம்சங்களுக்கான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் சாமிநாதன் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது கடந்த அக்டோபர் மாதம்
10 ஆம்தேதி காலை 10.25 அளவில் மலாக்காவில் முதலமைச்சர் துறையிலுள்ள மனிதவள ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவாகரத்துக்கான ஆட்சிக்குழு அலுவலகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணத்தை பறிமுதல் செய்யக் கூடிய குற்றவியல் விதியின் 130 JB(1) (a) கீழ் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெலிசாபெட் பாயா வான் முன்னிலையில் அந்த மூவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர்கள் அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலை அசைத்தனர்.
இவர்கள் மீண்டும் டிசம்பர் 16-ம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
டி.பி.பி . முகமட் இஸ்கந்தர் அகமட் மற்றும் முகமட் இஷானுடின் அலியாஸ் ஆகியோர் அரசு தரப்பில் ஆஜராகிய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் ராம் கப்பார்சிங் தலைமையில் ஐந்து வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
சொஸ்மா சட்டத்தின் 13 வது விதியின் கீழ் அந்த மூவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லையென
டி.பி.பி முகமட் இஸ்கந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று காலை மணி 10 45 அளவில் மலாக்கா செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திலிருந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.
No comments:
Post a Comment