2009.05.17 இற்கு முன்னர் இது நடந்திருந்தால் குருக்களின் இன்றைய நிலை என்ன?
நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நாமல் ராஜபக்ச வடகிழக்கின் மூலை முடுக்கெங்கும்; உலாவி வருவதுடன் அங்குள்ள மதத்தலைவர்களால் அவர் ஆசீர்வதிக்கவும் படுகின்றார்.
இந்நிலையில் வரலாற்றின் சுமார் 12 வருடங்களுக்கு முந்திய காலப்பகுதிக்கு இலங்கைநெற் உங்களை எடுத்துச் செல்கின்றது. கடந்த 2007 ஆண்டு பெப்ரவரி மாதம் கிழக்கு முழுவதும் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்காக 2007.02.03 அன்று வாகரைப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
மிகவும் ரகசியமாகவும் பாதுகாப்பு வேலிகளுக்கும் மத்தியில் சென்றிறங்கிய மஹிந்த ராஜபக்சவிற்கு அங்கு வரவேற்பு நிகழ்சி நிரல் ஒன்றும் ஏற்பாடாகியிருந்தது. தமிழர் பிரதேசம் ஆகையால் பிக்குகளை கொண்டுசெல்லவில்லை. ஆலயபூசகர் ஒருவரையே அழைத்துச் சென்றனர். (நன்றாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள் அழைத்துச் சென்றனர்) எதற்கு எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்பது கூட சந்திவெளி பிள்ளையார் கோயில் ஆலய குருக்கள் ஐயா செல்லையாவிற்கு தெரியாது. குருக்களை அழைத்துத்தான் சென்றார்கள் என்பதும் ஈ புகாத மூலை முடுக்குகள் எல்லாம் புகுந்து வெளியே வரக்கூடியவர்கள் என்று கூறிக்கொண்ட பிலிகளின் புல-நாய்வுத்துறைக்கு தெரிந்திருக்காமலும் இல்லை.
அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட குருக்களுக்கு அவ்விடம் சென்றபோதுதான் நாட்டின் ஜனாதிபதி அங்குவருகின்றார் என்பதும் அவருக்கு ஒரு ஆசீர்வாத பூசை செய்யவேண்டும் என்பதும் தெரியவந்தது. சுற்றிவர கனரக ஆயுதங்களுடன் நிற்பவர்களிடம் முடியாது என்று சொல்லமுடியுமா? இல்லை, அது இந்து தர்மமும் ஆகுமா?
நாட்டின் தலைவரின் நெற்றியில் விபூதி பூசினார். மஹிந்த வந்த ஹெலிக்கொப்டர் தொடரணி கிளம்பிச் சென்றது. ஐயா வையும் அழைத்துவந்த விதமாக கொண்டுசென்று விட்டுவிட்டனர்.
08.02.2007 8.30 மணியிருக்கும் தனது இரவுபோஷனத்தை எடுத்துக்கொண்டிருந்தார் குருக்கள். இருவர் நுழைந்தனர். வெளியே வா கதைக்கவேண்டும் என்றனர். சாப்பிடுகின்றேன் தம்பி என்றார். அதெல்லாம் அவர்களுக்கு எதற்கு.. தங்களுக்கே உரித்தான பாணியில் அழைத்தனர்.. சாப்பாட்டுக்கோப்பையை வைத்துவிட்டு எழுந்து சென்றார் பூசகர்.. வீட்டுக்கு பின்புறமாக அழைத்துச் சென்றனர்.. சில நிமிடங்களில் வீட்டுக்கு பின்னால் டும் டும் கேட்டது.. வீட்டார் சென்று பார்த்தபோது பூசகர் இரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
அந்த மூன்று பிள்ளைகளின் தந்தை செய்த குற்றம் என்னவென்று இன்றும் எமது சமூகம் அறியவில்லை. எவராவது கேள்வி எழுப்பினால் சிறு சிறு தவறுகள் நடந்துதானாம் இருக்கின்றது. தமிழீழ மக்களுக்கு கொலை சிறிய தவறு.
இவ்வாறு நிறையவே சிறிய சிறிய தவறுகள் இடம்பெற்றது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் இன்று அந்த தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக இன்று மக்கள் பேசவிரும்பும் ஆனால் பேச மறுக்கும் விடயம் யாதெனில் எதற்காக 2009 மே 17 வரை காலம் காத்திருந்தது என்பதாகும்.
காலம் இதை 1987 லேயே, அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தபோது செய்திருந்தால், குருக்களது உயிருடன் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதை எம் சமூகம் ஆய்வுக்குட்படுத்த மறுகின்றது. 1987 ல் சில நூறு உயிரிழப்புக்களை மாத்திரம் கொண்டிருந்த எம்சமூகம் 1987 இலிருந்து 2009 மே வரை எத்தனை உயிர்களை விலை கொடுத்துள்ளது என்பதை மாத்திரம் பேச விரும்புகின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் இன்னும் ஒரு பூசகருக்கு டும் டும் விளாது என்ற உத்தரவாதத்தை காலம் மஹிந்த ராஜபக்சவின் நாமத்தால் தமிழ் மக்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
அந்த உத்தரவாதம் கிடைத்திருக்காவிட்டால் இன்று இந்த பூசகரின் நிலை என்ன?
0 comments :
Post a Comment