Tuesday, October 1, 2019

கோட்டாவிற்கு எதிரான மற்றுமொரு வழக்கு 14 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையை இடைநீக்கி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (01) எல்.டீ.பீ.தெஹிதெனிய, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மனு விசாரணையை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்தனர்.

அதன்படி, கொழும்பு விசேட நீதாய நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையை இடைநீக்கி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரையில் நீடிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கை விசாரணை செய்வதற்கு நிரந்தர நீதாய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு அந்த நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு நிராகரிக்கப்பட்டமை சட்ட விரோதமானது என தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனுவை தங்களுக்கு விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரித்திருந்தது.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோட்டாபய ராஜபக்ஷவினால் விஷேட மேன்முறையீட்டு மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா முன்வைத்தவற்றை கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழு குறித்த மனுவை விசாரணை செய்ய அனுமதி வழங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment