Monday, September 2, 2019

இரு T56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது

இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரிடமிருந்து ரி56 வகை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை (31) இரவு 11.40 மணியளவில், குருணாகல், குடா கல்கமுவ வீதியில் கோவா கொட்டுவ சந்திக்கு அருகில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் அணிந்திருந்த ஜெகட்டினுள் (Jacket) இருந்து ரி56 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் 10 தோட்டாக்கள் கொண்ட அதற்கான மெகசின் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த ஆயுதங்களுடன் இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று (01) பிற்பகல், வெடிபொருட்கள் தொடர்பில் பயிற்றப்பட்ட நாயை பயன்படுத்தி, குறித்த சந்தேகநபர்களின் வீடுகளை சோதனையிட்டபோது, மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரின் வீட்டிலிருந்து மேலும் ஒரு ரி56 வகை துப்பாக்கி ஒன்றும் அதனை சுத்தப்படுத்தும் தொகுதியொன்றும், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட வாயு ரைபில் ஒன்றும், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தூரநோக்கி ஒன்றும், 12 போர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெற்று தோட்டாக்கள் 06, இராணுவத்தினர் பயன்படுத்தும் உபரண பொதிகள் 02, ஹனஸ் தொகுதி 01, பெல்ட் ஓடர் 02, பூச்சஸ் 02, ஆயுத பட்டி 04, தண்ணீர் போத்தல் 02, ஹெல்மெட் 01, கறுப்பு இடுப்பு பட்டி 01, தொப்பி 01, காலுறை 01 டின், ஒயில் போத்தல் 01, பிஸ்டல் மெகசினை இடும் ஹோஸ்டர் 01, ரப்பர் முத்திரை 01, உபகரணங்களை இடும் பச்சை நிற பைகள் 02 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இராணுவப் படைவீரர் என்பதோடு, மற்றைய நபர் இராணுவ சிவில் ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், 46 வயதான, குலதுங்க முதியன்சலாகே துஷார சந்திமால் எனவும், இவர் தாஹிகமுவ, குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர், புத்தள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஆவார்.

குறித்த நபரின் வீட்டிலிருந்து ரி56 வகையிலான ஆயுதம், பகுதி வாயு துப்பாக்கி ரி56 ரவைகள் 10, மெகசின் ஒன்று, இராணுவச் சீருடைகள் உள்ளிட்ட ஒரு தொகை பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து வந்த நபர், 37 வயதான, கருணாதிபதி தேவலாகே சமிந்த சிறிஜயலத் எனவும் இவர் குடா கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் இராணுவ சிவில் ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது இல்லத்தை பொலிஸார் பரிசோதனை செய்த போது ரி56 வகையிலான துப்பாக்கியின் வெற்றுத் தோட்டாக்கள் 04, இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட வாயுத் துப்பாக்கி மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் உபகரணங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் (01) குறித்த இருவரும் குருணால் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்தவற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் (02) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில அதிகாரியின் நடவடிக்கையின் மூலம் குற்ற விசாரணையிப் பிரிவின் தற்காலிப் பொறுப்பதிகாரி சுஜீவ சமன்த தலைமையில் பொலிஸ் அதிகாரிகளான சேனாநாயக, துசாந்த, ரசிக, காரிப்பெருவ, விஜயவர்தன ஆகியோர்கள் சந்தேகநபர்களுடன் ஆயுதப் பொருட்களை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment