Wednesday, September 4, 2019

JVP யுடன் TNA இணைந்தால் நல்ல மாற்றம் வரும் - எம்.ஏ.சுமந்திரன்

JVP யுடன் TNA இணைந்தால் நல்ல மாற்றம் வரும் இருப்பினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஊடக பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கும் வரையில் தமது கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படாது
பெயரிடப்படும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் ஆதரவு அளிக்கும் கட்சி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என "த ஹிந்து" பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்க்காணலின் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு சில வாக்குறுதிகளின் அடிப்படையில் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளித்ததாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வது போன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்தல். அவற்றில் பிரதானமானவை என தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்வதற்காக 1994 ஆம் ஆண்டு தொடக்கம் பொதுமக்களால் தெளிவான முடிவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு கட்சிகள் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததால், இம்முறை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கட்டாயமாக ரத்துச் செய்யப்படும் என நம்பியிருந்ததாகவும், அது இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்படும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஆராய்ந்து தனது கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவித்த சுமந்திரன், தனது கட்சிக்கு எவ்வித அவசரமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்தால் நல்ல மாற்றம் ஏற்படும் என பலர் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைவது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது எனவும் நீண்டகாலத்தில் இது தான் சிறந்த முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரதான இரு கட்சிகளுடன் தான் தொடர்பில் இருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஏனெனின் அவர்களே ஆட்சியில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணி போன்று ஏனைய கட்சிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com