அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலுள்ள குர்திய அகதி பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளராக நியமனம்.
ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி இங்கிலாந்தின் முன்னணி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையின் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள பிர்க்பெக் சட்டப்பள்ளியில் இம்மாத இறுதி முதல் அவர் பணியைத் தொடங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தங்கியிருந்த அவர், ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். கிறிஸ்துமஸ் நோக்கிய ஆபத்தான பயணத்தையும் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் சிறைப்பட்டிருப்பது குறித்தும் இந்நூலில் எழுதிய இவர், இதற்காக பல விருதுகளை வென்றிருக்கிறார்.
தற்போது, மனுஸ்தீவு முகாம் மூடப்பட்டு அங்கிருந்த பூச்சானி உள்பட பெரும்பான்மையான அகதிகள் பப்பு நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பேயில் உள்ள சிறை அருகே அமைக்கப்பட்டிருக்கும் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை ஆஸ்திரேலிய மக்களுக்கு சொல்வதையே தனது கல்வி முயற்சிகளின் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளதாக குர்து அகதி பூச்சானி தெரிவித்துள்ளார்.
“ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புரியும் வகையிலேயே எப்போதும் நான் எழுதுகிறேன், அது முக்கியமென கருதுகிறேன்,” என ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பூச்சானி.
பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளிக்கு தலைமை வகிக்கும் பேராசிரியர் ஸ்டீவார்ட் மோதா, பூச்சானி அவர்கள் எங்கள் கல்வி மையத்திற்கு பெரும் சொத்தாக இருப்பார் எனத் தெரிவித்திருக்கிறார்.
அகதியாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள பூச்சானி, பப்பு நியூ கினியா தீவிலிருந்து வெளியேற அனுமதி இல்லாத காரணத்தால் இணையவழியாக அவர் பேராசிரியர் பணிகளை செய்யவிருக்கிறார்.
இதேநேரம் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானியரை மிட்டாய் கடையில் அடிமையாக வைத்திருந்ததாக மெல்பேர்னில் உள்ள மருத்துவர் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2015- 2017 ஆண்டுகளில் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரை கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தி வர்த்தகம் செய்ததாக சய்யத் பார்ஷ்சி (46) மற்றூம் நகஹ்மே மோஸ்தாபே (45) என்ற தம்பதியனர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழுநாட்களும் 14 மணிநேரம் அவர்கள் வேலை வாங்கியதாக ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெர்ஷிய புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பின் போதும், நீண்ட நேரம் வேலைவாங்கியாதாகவும் மூன்று நாட்கள் கடையிலேயே இருந்ததாகவும் கூறியுள்ளார் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர்.
2013ம் ஆண்டு மனைவி மற்றும் மகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக இந்த தஞ்சக்கோரிக்கையாளர், கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மெல்பேர்ன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment