விடுதலைப் புலிகளுடன் பினாங்கு ராமசாமிக்கு தொடர்பா? மலேசிய போலீஸ் சொல்வதென்ன?
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார்.
துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்குறிப்பிட்ட காணொளிப் பதிவானது முன்பே எடுக்கப்பட்டது என்றும், பழைய பதிவை சிலர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் ஹாமிட் பாடோர் கூறினார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், தமிழீழ ஆதரவுக் காணொளி குறித்தும், அதனை மையப்படுத்தி உள்ள பிரச்சினை தொடர்பாகவும் முன்பே விசாரணை நடந்து முடிந்துள்ளது என்றார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் அதன் மீது உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அப்துல் ஹாமிட் கூறினார்.
லண்டனில் நடந்த போராட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியைப் பிடித்திருக்கும் தமிழர் ஒருவர். (கோப்பு படம்)
"இந்தக் காணொளிப் பதிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். இந்தக் குறிப்பிட்ட காணொளி மட்டுமல்ல..., இதேபோல் வேறு சில வழக்குகளும் உள்ளன.
"இனிமேல் எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாது. இனம், மதம் மற்றும் அரச அமைப்பை சிதைக்கும் வண்ணம் செயல்படுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹாமிட் மேலும் எச்சரித்தார்.
துணை முதல்வர் ராமசாமி சம்பந்தப்பட்ட காணொளிப் பதிவு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் காவல்துறைக்கு சற்றே அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
அனைத்துலக பயங்கரவாத அமைப்புகளை ஆராதிக்கும் செயல்பாடானது மலேசியாவுக்குப் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேராசிரியர் ராமசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ ஆகிய இருவரும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதமே இந்தக் காணொளி தொடர்பாக மலேசிய காவல்துறை விசாரணை நடத்த துவங்கியது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற தாம் முயற்சி மேற்கொண்டதாக ராமசாமி தெரிவித்தார் என மலேசிய ஊடகம் தற்போது சுட்டிக்காட்டி உள்ளது.
மலேசிய போலிஸ்
விடுதலைப்புலிகளுடன் ராமசாமி இன்னும் கூட தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டுவதற்கு ஏற்ப இந்தக் காணொளிப் பதிவு அமைந்துள்ளது.
ராமசாமி: ஜாகிர் நாயக்கை கேள்வி கேட்டதால் வீண் பழி சுமத்துகிறார்கள்
இந்நிலையில் துணை முதல்வர் ராமசாமியை பிபிசி நியூஸ் தமிழ் தொடர்பு கொண்டபோது, தம் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
மத போதகர் ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளை தாம் விமர்சித்து வரும் நிலையில், பிரச்சினையை திசை திருப்பும் வகையில் தம்மை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக சித்தரிக்க சிலர் முயற்சிப்பபதாக அவர் கூறினார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் முடிவடைந்த பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாட்டில் இல்லை என்று சுட்டிக்காட்டிய ராமசாமி, தம் மீது குற்றம்சாட்டுபவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டில் இருப்பதை நிரூபிக்க இயலுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
"கடந்த 2003-2004ஆம் ஆண்டுகளில் நான் இலங்கை சென்றிருந்தேன். அங்கு பல இடங்களுக்குச் சென்று ஈழத் தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொண்டேன். பின்னர் பேச்சுவார்த்தை மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு ஏதேனும் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டது உண்மைதான்," என்று துணை முதல்வர் ராமசாமி தெரிவித்தார்.
ஜாகீர் நாயக்
தமது இந்தப் பயணத்தையும் முயற்சியையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தம்மை சித்தரிக்க முயற்சி நடப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக மதிமுக பொதுச்செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோருடன் தாம் இருக்கும் புகைப்படங்களை வைத்து, சிலர் தவறான தகவல் பரப்புவதாகவும் ராமசாமி சாடினார்.
"ஜாகிர் நாயக் மீதான பண மோசடி, பயங்கரவாத தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.
"இந்தக் குறிப்பிட்ட காணொளி தொடர்பாக போலீசார் ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இப்போது திடீரென இந்தக் காணொளி மூலம் சிலர் சர்ச்சை கிளப்புவது ஏன்?
"காவல்துறை நடத்திய விசாரணையின் முடிவு என்ன? அது எதுவாக இருப்பினும் ஏற்கத் தயாராக உள்ளேன்," என்று ராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிபிசி தமிழ்
0 comments :
Post a Comment