Friday, September 6, 2019

கோப் குழுவின் முன் வெட்கித் தலைகுனிந்து நின்ற ரை-கோட் அணிந்த கொள்ளையர்கள்.

இலங்கையின் இன்றைய ஊழல் நிறைந்த ஆட்சிக்கும் பொருளாதார வீழ்சிக்கும் பிரதானமான காரணமாக அமைந்துள்ளவர்கள் அரச உத்தியோகித்தர்கள். இவர்கள் மக்களின் பணத்தில் ஊதியத்தை பெற்றுக்கொண்டு மக்களின் வாழ்விற்கே வினை வைத்து வருகின்றனர். ரை-கோட் அணிந்த இக்கொள்ளையர்களால் இந்நாட்டின் சொத்துக்கள் முற்றிலும் சுரண்ப்படுகின்றது.

இவ்வாறு மக்கள் வங்கியின் பொது முகாமையாளரான வசந்தகுமாரின் பெயரால் சுமார் 52 மில்லியன்கள் அநாவசியமாக செலவிடப்பட்டுள்ளமையும் அவர் ஓய்வு பெற்றுச்செல்லும்போது 15 மில்லியன் பெறுமதியான பென்ஸ் கார் ஒன்றை வீட்டுக்கு கொன்று சென்றுள்ளமையும் கோப் குழு முன்னிலையில் அம்பலமாகியுள்ளது.

மக்களின் உதிரத்தைக் குடிக்கும் கயவர் கும்பல் நேற்று கோப்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தது. வங்கியின் இயக்குனர்சபை அடங்கியிருந்த கும்பலிடம் 'இதையெல்லாம் அனுமதிக்க உங்களிற்கு வெட்கமாக இல்லையா?' என கோப் குழு கறாராக வினவ, தலையை குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்தனர்.

மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளருக்கு ஆறு மாத சேவை நீடிப்பு வழங்கக்கூடாது என ஏற்கனவே கோப் குழு அறிவித்திருந்த நிலையில், அதை புறந்தள்ளி வங்கியின் இயக்குனர்சபை அவருக்கு ஆறு மாத சேவைநீடிப்பு வழங்கியிருந்தது. இதை கோப் குழு காரசாரமாக விமர்சித்தது. அவருக்கு சேவை நீடிப்பு வழங்கியதன் மூலம் அரச செலவில் ஏற்படுத்தப்பட்ட 100 மில்லியன் நட்டஈட்டை இயக்குனர் சபையிலுள்ளவர்களே செலுத்த வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

நேற்றைய கோப்குழு விசாரணைக்காக மக்கள் வங்கி தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ, மேலதிக செயலாளர் ஆர்.சேமசிங்க, தற்போதைய பொது முகாமையாளர் ரசிதா குணவர்தன, நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் முன்னிலையகியிருந்தனர்.

கோப் குழுவின் முந்தைய விசாரணையில் வசந்குமாருக்கு 2.1 மில்லியன் ரூபா மாதாந்த சம்பளம் வழங்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்தே அவருக்கு சேவை நீடிப்பு வழங்க வேண்டாம் என கோப் பரிந்துரைத்திருந்தது. இதற்கு லக்ஷ்மன் கிரியெல்ல, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் ஒப்புதல் அளித்திருந்தனர். ஆனால் அதை மீறி அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. இரண்டு அமைச்சர்களையும், அதிகாரிகள் தவறாக வழிநடத்தியுள்ளனர் என கோப் குழு கண்டித்தது.

வசந்குமார் ஓய்வுபெறவிருந்தபோது, அவரது பதவிக்கு நியமிக்கப்படும் துணை அதிகாரியை பயிற்றுவிக்க வசந்தகுமாரின் சேவை ஆறு மாதங்கள் தேவையென குறிப்பிட்டே, அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டார்.

வங்கியின் தற்போதைய பொது முகாமையாளர் ரசிதா குணவர்தனவிடம் இதுபோன்ற எந்தவொரு பயிற்சியும் பெற்றாரா என்று கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கேட்டார்.

வங்கியில் எவ்வளவு காலம் பணியாற்றி வருகிறார் என்று வினவியபோது, 38 ஆண்டுகள் என்றார் ரசிதா குணவர்தன.

கோப் குழுவின் அங்கத்தவரான குரநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, வசந்த குமாருக்கு நீட்டிப்பு வழங்க இது ஒரு 'இட்டுக்கட்டப்பட்ட காரணம்' என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கி பொது முகாமையாளரின் சம்பளம் நாட்டின் பிற வங்கிகளின் பொது முகாமையாளர்களின் நிலையான சம்பளத்தை விட மிக அதிகம் என்று ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியிருந்தார். ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்கியதன் மூலம், 15 மில்லியனையும், மேலும் 37 மில்லியனையும் வசந்த குமாருக்கு நிலுவைத் தொகையாக செலுத்தியது. கூடுதலாக, அவருக்கு 16.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கியது. வசந்த குமார் இரண்டு வாகனங்களுடன் ஓய்வு பெற்றார் என்று அவர் மேலும் கூறினார்.

'இரண்டு கார்களுடன் ஒரு அதிகாரி வீட்டிற்கு செல்வதை உலகத்தில் எங்கே காணலாம்?' என்று ஹந்துன்நெத்தி வினவினார். 'இந்த வகையான மோசடியை நீங்கள் எவ்வாறு அனுமதிப்பீர்கள்?' என கேட்க, வங்கியின் தலைவர் நிசங்க நாணயக்கார, அவர் அப்போது தலைவர் இல்லை என்று கூறினார். ஆனால் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரியின் குறிப்புக்களின்படி, அந்த கார்களில் ஒன்றிற்கு ஒரு சென்டிமென்ட் மதிப்பைக் கொண்டிருந்தார் என்றும் அதைக் கேட்டதாகவும் ஒரு ஆவணம் உள்ளது என்றார்.

'இந்த காரணங்கள் என்ன?' என்று கோப் அங்கத்தவர் லக்ஷ்மன் செனவிரத்ன எம்.பி கேட்டார். 'இந்த சாக்குகளை வழங்குவதன் மூலம் தவறான செயலை நியாயப்படுத்த முடியும் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? நீங்கள் பொதுப் பணத்துடன் விளையாடியுள்ளீர்கள். இயக்குநர்கள் குழு பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.

அமைச்சர்கள் லக்ஸ'மன் கிரியெல்லா மற்றும் மங்கள சமரவீர ஆகியோரை அவர்கள் தவறாக வழிநடத்தியதாக கோப் தலைவர் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இயக்குநர்கள் குழு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக அவர் மேலும் கூறினார். அவர்கள் கோப் கொடுத்த உத்தரவை மீறி அதன் மூலம் பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். 'ஆறு மாத முன்கூட்டியே பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய நபருக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வெட்கப்பட வேண்டும்' என்றார்.

'அதிகாரிகள் பொது நிதியை இந்த முறையில் வீணடிப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பல்வேறு வழிகளில் வங்கியை மோசடி செய்த ஒரு நபரின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவற்றில் ஒன்றுக்கு சென்டிமென்ட் மதிப்பு இருப்பதாகக் கூறி இரண்டு கார்களுடன் வீட்டிற்குச் செல்கிறீர்களா? இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கூட கனவு காணாத பல அரசு அதிகாரிகள் உள்ளனர்' என்றார் ஹந்துன்நெத்தி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com