ஒரு பரசூட் வீரரின், மரண பாய்ச்சல்..
20ம் திகதி நேரம் காலை 7.45. அம்பாறை உகனை விமான படை ஒடுதளத்திலிருந்து மேலேழும்பிய வை 12விமானத்தில் பரசூட் வீரர்கள் சிலர் பயணித்தார்கள். அது வானில் சாகசமிடும் சீ ஆர் டபிள்யூ என்னும் பரசூட் பயிற்சி பெறும் அணியாகும். பயிற்சி ஆலோசகர் இராணுவ விசேட அதிரடி படையணியின் அதிகாரம் பெற்ற அதிகாரி சம்பிக்க குமாரசிறி.
நிலத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்ைகயில் அந்த அதிகாரி விமானத்திலிருந்து குதித்துள்ளார். நடந்தது என்னவென்று யாரும் அறிந்து கொள்வதற்கு முன்னரேயே அவர் நிலத்தில் மோதி விழுந்தார்! பரசூட்டில் பாயும் போது, குமாரசிறியிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் கோப்ரல் சுதேஷ் குமாரவின் பரசூட்டும் குமாரசிறியின் பரசூட்டும் ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளன. இது பற்றி சிறிதளவாவது சொல்லத் கூடியவர் சுதேஷ் மாத்திரமே.
“அன்று நாம் பன்னிரெண்டு பேர் ஜம்ப் பண்ணச் சென்றோம். முதலில் நான்கு பேர் குதித்தார்கள். அதன் பின்னர் என் முறை. பின்னர் குமாரசிறி சேர் குதித்தார். அவர் தான் அதிக அனுபவம் வாய்ந்த ஜம்பர்! பாய்ந்த இரண்டு விநாடிகளில் பரசூட்டை விடுவிக்கும்படி என்னிடம் கூறினார். அவர் ஒரு விநாடியில் விடுவிப்பதாகக் கூறினார்.
பின்னர் நாம் இருவரும் வானில் சாகசம் செய்யத் தயாராகும். அவ்வேளையில் குமாரசிறி சேரின் பரசூட்டும் எனது பரசூட்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டன.
அப்போது அவர் “சுதேஷ், பதற்றப்படாமல் இரு. நான் ஏதாவது செய்கின்றேன்” என்று கூறினார். திடீரென சேரின் பரசூட் கயிறு எனது உடம்பில் சிக்கி கழுத்தை இறுக்கியது. சேர் எனக்கு பின்னால் இருந்தார். நான் சேர் சேர் எனக் கத்தினேன். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை. ஒன்றரை விநாடிகள் நாம் சிக்கியிருந்தோம். சேரிடமிருந்து எந்தவொரு பதிலும் அவ்வேளையில் கிடைக்காததால் பரசூட் பயிற்சியில் வழங்கப்படும், அறிவுரைபின்படி நான் செயல்பட்டேன்.” என்று அன்றைய சம்பவத்தை சுதேஷ் விவரிக்கிறார்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் பரசூட் வீரர்கள் செய்வது என்னவென்றால் சிக்கியுள்ள கயிறை வெட்டிவிடுவதாகும். அதனால் சுதேஷ் அந்த முறையை பின்பற்றி தன்னிடமிருந்த கத்தியால் சிக்கியிருந்த குமாரசிறியின் இரண்டு கயிறுகளை வெட்டி தன்னை விடுவித்துக் கொண்டார்.
அப்போது குமாரசிறி விரிந்த பரசூட்டுடன் கீழே சாதாரண பரசூட் வீரரைப் போலே விழுந்துள்ளார். ஆனால் அவரிடமிருந்த பரசூட்டை கட்டுப்படுத்தும் திறன் காணப்படவில்லை. அவர் கட்டுப்பாடின்றி பரசூட்டுடன் கீழேவிழுவதை கீழே நின்றிருந்த பரசூட் வீரர்கள் கண்டுள்ளார்கள்.
விமானப்படை முகாமின் கீழிறங்க வேண்டிய வலயத்தைவிட்டு காட்டுப்பகுதியிலேயே குமாரசிறி பரசூட்டுடன் விழுந்து கிடந்துள்ளார். அவரின் உடம்பின் வெளிபுறத்தில் எவ்வித பாதிப்பும் இருக்கவில்லை. ஆனால் அவர் மரணித்துக் கிடந்தார்.
உண்மையில் அவருக்கு நடந்ததென்ன? இந்நாட்டின் அனுபவம் வாய்ந்த பரசூட் வீரரான மேஜர் ஜெனரல் நிர்மால் தர்மரத்ன என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். குமாரசிறி எம்மிடையே இருந்து திறமையான பரசூட் வீரர்.
இச் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் அம்பாறையில் நானும் குமாரசிறியும் ஜம்ப் செய்து வானத்தில் சாகசம் செய்தோம். சீ.ஆர்.டபிள்யூ என்பது அவதானம் மிகுந்த வேலையாகும். பரசூட் விரிந்திருக்கும் வேளையில் ஒருவரையொருவர் பிடிக்க முனையும் போது பரசூட் சிக்கிக்கொள்ளும், ஆனால் அனுபவமுள்ளவர்கள் அந்த சிக்கலை கவனமாக விடுத்துக்கொள்வார்கள். அந்த நம்பிக்கையில் தான் குமாரசிறி சீ.ஆர். டபிள்யூ பாய்ச்சலுக்கு புதியவரான கோப்ரலை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார். ஆனால் என்ன நடந்தது என்று எண்ணவே முடியாமலுள்ளது.
இந்த பரசூட்டில் ஒரு லைனில் (கயிறில்) மேலே அதிகளவு வலு இருக்கும். சாதாரணமாக கழுத்தில் சிக்கினால் மிகவும் ஆபத்தாகும். அவ்வாறான சம்பவம் தான் குமாரிசிறிக்கு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரும் எம்மிடையே உள்ள அனுபவம் வாய்ந்த இருவர் சிக்கிக் கொண்டார்கள். ஆனால் இருவரும் பின்னர் பரசூட் இரண்டையும் கட்வே (கட்வே என்பது திறந்தபடியுள்ள பரசூட்டை கழற்றி விட்டு மேலதிக பரசூட்டை திறப்பது) செய்தார்கள். குமாரிசிறியும் பரசூட்டை கட்வே செய்துள்ளார். கழுத்தில் சுற்றியிருந்ததால் பரசூட் கழன்று செல்லவில்லை என்று எண்ணலாம்.
680 பரசூட் பாய்ச்சலை நடத்தியுள்ள இராணுவத்தின் 3ஆவது விசேட படையணியின் அதிகாரம் பெற்ற அதிகாரியான சம்பிக்க குமாரசிறி விசேட படையணியிலுள்ள பரசூட் வீரர்களில் அதிகளவு பாய்ச்சலை நிகழ்த்திய வீரர் எனப் பெயர் பெற்றவர்.
2010ம் ஆண்டு விமானப்படையிலுள்ள சிறந்த பரசூட்காரரான ஓய்வுபெற்ற விங் கமாண்டர் ஹரிஸ்சந்திர ஹேரத்தின் கண்காணிப்பில் குமாரசிறி கட்டுநாயக்கவில் பரசூட் வீரராக பயிற்சி பெற்றுள்ளார். ப்ரீஸ்டைல் பரசூட்காரரொருவர் செய்யும் சீ.ஆர்.டபிள்யூ விங்சூட் போன்ற அனைத்து பாய்ச்சல்களிலும் நிபுணரான குமாரசிறி, மிகப்பயங்கரமான பரசூட் பாய்ச்சலான பேஸ் ஐம்ப் பாய்ச்சல் புரியும் மூவரில் ஒருவர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் சம்பிக்க குமாரசிறி பரசூட் வாழ்க்கையின் அனுபவங்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“பேஸ் ஜம்ப் பாய்ச்சல் என்பது புதுமையான அனுபவம். கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே இருப்போம். நான் ஒஸ்ரியாவில் கன்பனாரில் அதிவேகப் பாதையிலுள்ள பாலமொன்றின் மீதிருந்தே பாய்ந்து பயிற்சி பெற்றேன். இத்தாலியில் ‘ஆர்கோ’ என்னும் பிரதேசத்திலுள்ள மலை மீதிருந்தே பாய்ந்தேன். 2500அடி உயரத்திலிருந்து கற்பாறையின் மேலேயே பரசூட் மூலம் இறங்கினேன். அந்த இடம் முடிவே தெரியாத இடமாக காணப்பட்டது. கொஞ்சம் தவறினாலும் உயிர் போய் விடும்.” அன்று அவ்வாறு அவர் கூறினாலும் அந்த தவறு தன்கையால் இடம்பெறுமென்று ஒரு போதும் அவர் எண்ணியிருந்த மாட்டார்.
முப்படைகளில் பணிபுரியும் நான்கு சகோதர சகோதரிகளை கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வர். வீர அன்னையாக அரச விருது பெற்ற குமாரசிறியின் தாயார் மகனின் உடலருகே கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை.
“எனது கணவர் பாம்பு தீண்டி இறக்கும் போது, எனது மகனுக்கு 17வயது. மகன்தான் வயல் வேலை, கூலி வேலை செய்து முழு குடும்பத்தையுமே காப்பாற்றினான். அதன் பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டான்.” இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ சேவையிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் சந்தர்ப்பம் கிடைத்தும் திறமையான பரசூட் வீரர் என்பதால் அவர் பரசூட் அணியின் அத்தியாவசியமான வீரராக இருந்தான். அதனால் அவர் தொடர்ந்தும் இராணுவ சேவையில் ஈடுபட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. மாத்தறை, கம்புறுபிட்டிய, புகுள்வெல்ல என்ற இடத்தில் வசித்தவரான 42வயதுடைய குமாரசிறி, இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவரது மனைவி நிரோஷா பிரியர்தர்சனி தற்போது மூன்றாவது குழந்தைக்கு தாயாகவுள்ளார்.
பரசூட்டில் குதித்து மக்களை மகிழ்ச்சிப்படுத்திய இலங்கை பரசூட் அணியில் சிறப்பாக சேவை புரிந்த திறமையான ஒரு வீரரை நாம் இழந்திருக்கிறோம்.
அமில மலவிசூரிய
தமிழில்: வீ. ஆர். வயலட்.
0 comments :
Post a Comment