Saturday, September 28, 2019

மைத்திரியின் கழுத்தில் இன்று கத்தி வைக்கின்றனர் ராஜபக்சர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இத்தேர்தலில் இலகுவாக கோட்டபாய ராஜபக்ச வென்றுவிடுவார் என்ற கருத்து நிலவியிருந்தாலும் அது அவ்வளவு இலகுவாக முடிந்துவிடும் என கருத முடியாத நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிறேமதாஸ நியமிக்கப்பட்டமை காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் ராஜதந்திர வியூகங்கள் தொடர்பில் நன்கு அறிந்திருந்த மஹிந்த ராஜபக்ச தரப்பினர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் சஜித் பிறேமதாஸவிற்கு வேட்பாளர் சந்தர்ப்பத்தை வழங்கமாட்டார் என்றே கணிப்பிட்டிருந்தனர். அதை வலுப்படுத்தும் பொருட்டு சஜித்தை தமது ஆட்கள் ஊடாக உந்துதல் கொடுத்து வேட்பாளர் கோரிக்கைக்கான போராட்டத்தை ஆரம்பிக்க வைத்து ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக உடைத்து வெற்றியை இலகுபடுத்திக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க என்ற அரசியல் நரி யாவற்றையும் கணிப்பிட்டு இறுதி முடிவை எடுத்துள்ளது. ஆனால் ரணில் சஜித்தை வெல்ல விடுவாரா என்பது பிரத்தியேகமாக பேசப்படவேண்டிய விடயம்.

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிரிந்து தேர்தலில் குதித்தால் மல்லிகை மொட்டின் வெற்றி உறுதி என்றிருந்த நிலையில், தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக போட்டியிட தயாராகி வருகின்றமை மஹிந்த தரப்பின் கணிப்பீட்டை தப்பாக்கியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதுடன் இதன் பின்னணியில் சந்திரிகா அம்மையார் செயற்பட்டுவருவதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால் கோத்தாவின் வெற்றி கேள்விக்குள்ளாகும் என்ற நிலையில் மீண்டும் மொட்டு இறங்கிச் செல்வதாக உள்ளக தகவல் தெரிவிக்கின்றன. நேற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இன்று முக்கியமான ராஜபக்சர்கள் மஹிந்து பசில் கோத்தா ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவை தனியாக சந்தித்து பேசவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனைகள் தொடர்பிலும் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பிலும் பேசப்படும் என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment