Thursday, September 19, 2019

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு பிரேரணை அமைச்சரவையால் நிராகரிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (19) மாலை கூட்டப்பட்ட விஷேட அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் பெரும்பான்மையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய சிறு கட்சி அமைச்சர்களான மனோ கணேஷன், பி.திகம்பரம் மற்றும் ரவூப் ஹக்கிம் ஆகியோர் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த பிரேரணைக்கு ரவி கருணாநாயக்க மற்றும் ராஜித சேனரத்ன ஆகியவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பினும் ஏனைய அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பிரேரணையை கொண்டு வருவதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் கலந்துரையாடக் கூடாது என விஷேட அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான விஷேட அமைச்சரவை கூட்டத்தை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவது கேவலமான செயல் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment