இந்த நாட்டை உடைய ஒருபோதும் அனுமதியேன். வழகிழக்குக்கு தீர்வென்றால் ஒருமித்த நாட்டிலேயே. சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிறேமதாஸ “பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன். அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வரும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் அதிக கவனம் செலுத்துவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நேற்று மாலை ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதித் தேர்தல். இதில் ஜனாதிபதி ஆசனத்தைப் பிடிக்கவே நாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம். இதில் கொள்கை உள்ளதே தவிர உடன்படிக்கை இல்லை. 2015ஆம் ஆண்டு எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று இம்முறையும் எமக்கு ஆதரவு கிடைக்கும் என்றே நினைக்கின்றன்.
ஜனநாயக ரீதியில் பயணிக்கும் அனைவரையும் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கின்றேன். பொதுக் கொள்கையின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம். ஆனால், இதில் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ள நான் தயாரில்லை. சர்வதேச உடன்படிக்கைக்கோ அல்லது உள்நாட்டு உடன்படிக்கைக்கோ நான் அடிபணியவும் மாட்டேன்.
வடக்கு, கிழக்கு மக்கள் 30 வருடங்களாகப் போரினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். அதேபோல் இந்த நாட்டில் கஷ்டப்படும் சகலருக்கும் நியாயமான வாழ்கையை உருவாக்கிக் கொடுப்பதிலும் நான் கவனம் செலுத்துவேன்.
நாட்டைக் கட்டியெழுப்பும் எமது பயணத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பேதங்கள் பாராது ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மனிதத்துவத்துக்கு முதலிடம் கொடுக்கும் யுகமொன்றை உருவாக்க நான் எதிர்பார்த்துள்ளேன்” – என்றார்.
0 comments :
Post a Comment