பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவில்லை - நிதி அமைச்சு
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுற்றுலாத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா சபையின் அங்கீகாரத்துடன் ஹொட்டேல்களுக்கு மாத்திரம் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் 4,919 அனுமதிபெற்ற மதுபான சாலைகள் உண்டு, இவற்றுள் 1,100 சில்லறை விற்பனை நிலையங்களாகும். 1,567 ஹொட்டேல்களும், 554 விடுதிகளும் அடங்குகின்றன. கலால் திணைக்களத்தினால் 368 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் வைன் மற்றும் பியர் விற்பனை நிலையங்கள் அடங்கியுள்ளன. இதே போன்று 200 விடுதிகளுக்கு கள் விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக திணைக்களம் வெளிநாட்டு மதுபான விற்பனைக்காக 1,080 அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
எவரேனும் ஒருவருக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் அது தொடர்பாக கலால்; திணைக்களத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உடன்பட வேண்டும்.
அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒருவர் கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் எந்தவெரு குற்றச்செயல்களிலும் தொடர்புபட்டிருக்க கூடாது. அத்தோடு சம்பந்தப்பட்டவர் வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அப்பால் அனுமதிபெற்ற மது விற்பனை நிலையங்களை அமைக்கவேண்டும் என்பது மற்றுமொரு விதியாகும்.
காலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு அமைவாக விண்ணப்பப் பத்திரத்தை சமர்ப்பித்த பின்னர் அது தொடர்பான விபரங்கள் பிரதேச செயலாளர். பொலிஸார் ஊடாக உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மதுபான சாலைக்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்களின் பெயர் விபரங்கள் கலால் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment