இரணைமடு விடயம் வடக்கு ஆளுநர் எந்த நடவடிக்கையும் இல்லை -கணேஸ்வரன் வேலாயுதம்
இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தினால் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20.08.2019 திகதியிடப்பட்ட கடிதத்திற்கமைய இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டு மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
கடந்த டிசம்பர் மாதம் இரணைமடுக்குள வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநரால் விசாரணை குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மூன்று கட்ட விசாரணை அறிக்கையும் 29.06.2019 இல் தமக்கு கிடைக்க பெற்றதாக வடமாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்
விசாரணை அறிக்கைக்கு அமைய தவறுகள் ஊழல்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கான தண்டனைகள் சட்டரீதியான ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படாமலே இருந்து வருகிறது.
எனவே விசாரணை அறிக்கையினை வெளியிட்டு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி 23.07.2019 திகதியில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனை தொடர்ந்து 20.08.2019இல் வடமாகாண ஆளுநருக்கு இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரணைமடுக்குள புனரமைப்பிற்கு பின்னரும் கிளிநொச்சியில் இன்றும் தண்ணீர்ப்பிரச்சனை தொடர்ந்த வண்ணமுள்ளது. 35000 மக்கள் தொடர்ந்தும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சியை பொறுத்த வரை இரணைமடுக்குள நீர் முகாமைத்துவம் பொருத்தமான கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவில்லை.
இதனால் எதிர்காலத்திலும் மக்கள் வறட்சியினால் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். பல மில்லியன் ரூபா செலவில் குளம் புனரமைக்கப்பட்டும் அது மக்களுக்கு பயனற்றதாகவே காணப்படுகிறது.எனவே இது தொடர்பில் பொருத்தமான நீர் முகாமைத்துவம் ஒன்றினை அமைத்து செயற்படுத்துமாறும் தயவுடன் வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment