Sunday, September 1, 2019

புலனாய்வு மறுசீரமைப்பின் பின்புலம்.. சுபத்திரா

கடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

அவ்வாறு கூறியதுடன் நிற்காமல் அதற்கான நடவடிக்கைகளையும் அடுத்த சில நாட்களிலேயே ஆரம்பித்திருக்கிறார். இதன்படி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு அந்தப் பதவியிலிருந்து நீ்க்கப்பட்டிருக்கிறார்.

இராணுவத் தளபதியாக புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் போது, கட்டளைப் பதவிகளில் மாற்றங்களைச் செய்வது வழமையானதே.

என்றாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா புலனாய்வுப் பிரிவை குறிவைத்தே அந்த திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறார். அது தான் கவனிப்புக்குரியதாக உள்ளது.

புலனாய்வுப் பிரிவினரை மையப்படுத்தியே தேசிய பாதுகாப்பு செயற்படுத்தப்படுகின்றது என்றும் அதனால், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைப்புச் செய்வதில் கவனம் செலுத்தப் போவதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவத்தில் மிகவும் வேகமாகப் பலபப்படுத்தப்பட்டது இராணுவப் புலனாய்வுப் பிரிவு தான். 7 பற்றாலியன்களுடன், 5000 பேர் கொண்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டிருந்தது.

தாம் பலமாக புலனாய்வுக் கட்டமைப்பை உருவாகியிருந்தோம். அதனை தற்போதைய அரசாங்கம் சீர்குலைத்து விட்டது என்று கோத்தபாய ராஜபக்ச அண்மையில் கூட ஒரு சந்தர்ப்பத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்பட்டு விட்டது என்றொரு பலமான கருத்து, கூட்டு எதிரணியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சிக்கால குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற சந்தேகத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 320 பேர் விசாரணைகளுக்கு உடபடுத்தப்பட்டனர் என்றொரு தகவல் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

எனினும், இவர்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் தான் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டதால், புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டு விட்டன என்றும், அதனால் தான், குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்றும் எதிர்க்கட்சிகளாலும் கடும் போக்காளர்களாலும், முன்னாள் இராணுவ அதிகாரிகளாலும் கூறப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், 2015இல் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே, 7ஆவது இராணுவப் புலனாய்வுப் பற்றாலியன் உருவாக்கப்பட்டது என்பதும் 8ஆவது இராணுவப் புலனாய்வு பற்றாலியன் உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் பலவினப்படுத்தப்பட்டு விட்டதாக, 21/4 குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான ஜெனரல் சாந்த கொட்டேகொடவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் முற்றாக நிராகரித்திருந்தனர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், புலனாய்வாளர்கள் சிலரைக் கைது செய்வதால், இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டது என்று கூறமுடியாது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். இராணுவத்தை மேலும் நவீன மயப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் கொண்டதாக மாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கான திட்டங்களை தாம் வகுத்திருப்பதாகவும், செயற்படுத்தவுள்ளதாகவும் முன்னர் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த திட்டத்துக்கு அமைய, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் தலைமையில், அடிப்படைவாதம், உள்நாட்டு வெளிநாட்டு தீவிரவாதம் தொடர்பாக புலனாய்வுகளை மேற்கொண்டு அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள எடுப்பதற்கு புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப் புலனாய்லுப் பிரிவுகளை விரிவுபடுத்தி, மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளது கவனிக்கத்தக்க விடயமாக இருக்கிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர்க்குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவரது போர்திறன் மிகவும் அசாதாரணமானது. புலனாய்வையும், அதற்கேற்ற உத்திகளையும் ஒருங்கிணைத்து திறமையாக கையாளக் கூடியவர் அவர்.

2002-2006 போர் நிறுத்த காலக்கட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கும், இராணுவப் பிரதிநிதிகளுக்கும் இடையில் வடக்கில் - இராணுவ சூனியப் பிரதேசங்களில் நடந்த பெரும்பாலான சந்திப்புக்களில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பங்கெடுத்திருந்தார்.

அந்தக் கூட்டங்களில் அவர் புலிகளின் தளபதிகளுடன், அமர்ந்து பேசுகின்ற ஒருவராக இருக்கவில்லை. பேச்சுக்களில் ஈடுபட்ட ஜெனரல் சாந்த கொட்டேகொட, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற தளபதிகளுடன் ஒரு உதவியாளராகவோ, பார்வயைாளராகவோ பங்கெடுத்திருந்தார்.

அதன்போது, அவர் பேச்சுக்களில் கவனம் செலுத்துவதை விட, புலிகளின் தளபதிகளினது ஆளுமையையும், பலம் மற்றும் பலவீனங்களையும், உடல்மொழிகளையும், உன்னிப்பாக கவனம் செலுத்தினார்.

அவரது அந்தக் கவனிப்புக்கள், இறுதிக்கட்டப் போரில், புலிகளுக்கு எதிரான போரைக் கையாளும் போது அவருக்கு உதவியிருந்தது என்பது பலருக்குத் தெரியாத இரகசியம்.

புலனாய்வுக்கும், அதனைச் சார்ந்த விடயங்களுக்கும் மாத்திரமன்றி, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இன்னொரு விடயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். இராணுவத்தை நவீன மயப்படுத்துவது சர்வதேச இராணுவங்களுக்கு இணையானதாக தரமுயர்த்துவது தான் அவரது அந்த இலக்கு.

ஏற்கனவே முன்னைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், இராணுவத்துக்கு நவீன கருவிகள் வாங்கப்பட்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் அதனை பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதனை செயலாக்கம் செய்வதற்கு தற்போதைய இராணுவத் தளபதி முன்னுரிமை கொடுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனினும், இந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவர் தனது திட்டங்களை செயற்படுத்துவாரா என்ற சந்தேகங்கள் உள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த பல இராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், பதவி உயர்வுகள் அளிக்கப்படாமல், விலகிச் செல்ல நேரிட்டது. இதனால் இதுவரை லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அடக்கியே வாசித்து வந்தார். ஆனால், இப்போது அவர், பலமானதொரு நிலையை எட்டியிருக்கிறார். முதலாவது அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அது அவருக்கான அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது.

இன்னொன்று சர்வதேச எதிர்ப்புகள், கண்டனங்களைப் பற்றி கவலையின்றி அவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறார்.

இதன் மூலம், போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றியோ, சர்வதேச எதிர்ப்புக்களைப் பற்றியோ கவலையில்லை, என்ற செய்தி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், இராணுவத்துக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இது, 2015இற்கு முன்னர் இலங்கை இராணுவம் எவ்வாறு செயற்பட்டதோ, எவ்வாறான முறையில் வழிநடத்தப்பட்டதோ அதேமுறையில் செயற்படுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், இராணுவத்துக்கு தற்போதும் பாதுகாப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனால், எல்லா மாவட்டங்களிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக முகாம்களுக்குள் முடங்கியிருந்த இராணுவம் ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர எவ்வாறு வெளியே வந்ததோ, அது போலவே, தொடர்ந்தும் வெளியே வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா யாருடைய உத்தரவுகளை நிறைவேற்றுபவராக யாருடைய விருப்புக்களை நிறைவேற்றுபவராக இருக்கப் போகிறார் என்ற கேள்வியும் உள்ளது.

பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட இருந்தாலும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு விவகாரங்களில் போதிய அனுபவங்களையோ, முதிர்ச்சியையோ கொண்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை.

இவ்வாறான நிலையில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு இராணுவத்துக்குள் வலுப்பெறும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.

ஏற்கனவே, இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கீழ் ஒரு கட்டளைத் தளபதியாக போரை வழி நடத்திய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவுகளை பெற்று, அதற்கேற்ப செயற்பட்டவர் என்றொரு குற்றச்சாட்டு உள்ளது.

இருவரும் மிக நெருங்கியவர்கள் என்பதால், வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் முற்றிலுமாக மறுக்க முடியாத ஒரு சூழலில். இந்த நியமனம், அவருக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

விரும்பியோ, விரும்பாமலோ, கோத்தபாய ராஜபக்சவின் அறிவுரைக்கமைய, புதிய இராணுவத் தளபதி செயற்படும் வாய்ப்புகள் இருப்பதை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், அவரது விருப்புக்கமைய நியமனங்களும், மறுசீரமைப்புகளும், திட்டங்களும் செயற்படுத்தப்படுமானால், அது ஆரோக்கியமானதொரு பாதுகாப்பு சூழலுக்கான அறிகுறியாக இருக்காது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைப்பதும், இராணுவத்தை நவீனமயப்படுத்துவதும், முக்கியமானதெனக் கருதும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அதனை எந்தளவுக்கு சுய ஆளுமையுடன் முன்னெடுக்கிறார் என்பதை பொறுத்தே அவருக்கான அங்கீகாரம் உறுதி செய்யப்படும்.

No comments:

Post a Comment