Saturday, September 28, 2019

வெடிபொருட்கள் மற்றும் போதைபொருட்களை கண்டறியக்கூடிய நவீன கருவிகளை சீன இலங்கைக்கு அன்பளிப்பு..

ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதுவர் செங் ஷியுவான் இந்தக் கருவிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

சிறிலங்கா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்தக் கருவிகளை சீனா கொடையாக வழங்கியுள்ளது.

இதுபோன்ற அதி நவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்கா பாதுகாப்புத் துறையினர் இதுவரை பயன்படுத்தியதில்லை.

கொடையாக வழங்கப்பட்ட கருவிகளில், 3 மீற்றர் சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கண்டறியக் கூடிய, மூன்று ரோபோக்களும் உள்ளடங்குகின்றன. இவை ஒவ்வொன்றினதும் பெறுமதி, 85.5 மில்லியன் ரூபாவாகும்.

தலா 90.5 மில்லியன் ரூபா பெறுமதியான, வெடிபொருட்களைக் கண்டறியும் மூன்று கருவிகளும் சீனாவினால் வழங்கப்பட்டுள்ளன. இவை, மனிதர்களில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை தன்னியக்க முறையில் கண்டறியக் கூடியவையாகும்.

அத்துடன் பொதிகளை சோதனையிடும், 50 எக்ஸ்ரே இயந்திரங்களையும், சீனா வழங்கியுள்ளது இவற்றின் மொத்தப் பெறுமதி 210.5 மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான, ஆயுதங்களைக் கண்டறிவதற்கான 50 பாதுகாப்புச் சோதனை கதவுகளையும், சீனா வழங்கியிருக்கிறது.

இவற்றுடன், வாகனங்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடிக்கக் கூடிய, 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான 25 வாகன சோதனை ஸ்கானர்களையும், தனிநபர்களைச் சோதனையிடுவதற்கான 500 உலோகங்களைக் கண்டறியும் கருவிகளையும், சீனா கொடையாக அளித்துள்ளது.

இந்த நிகழ்வில் சீன அதிகாரிகளும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும் கலந்து கொண்டனர்.

21/4 குண்டுத் தாக்குதல்களை அடுத்து சீனாவிடம் சிறிலங்கா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தக் கருவிகள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையுடனான ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் அனைத்து ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனத் தூதுவர் செங் ஷியுவான் கூறினார்.



No comments:

Post a Comment