Sunday, September 29, 2019

ரயில்வே ஊழியர்கள் பகிஷ்கரிப்பு: ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவையில் இணைக்கத் தீர்மானம்

ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர, ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

20 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இதுவரை சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின், அவர்களை சேவையில் ஈடுபடுத்தி ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், இன்று முற்பகல் 5 ரயில்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

கண்டி, இறம்புக்கனை, சிலாபம், காலி மற்றும் அவிசாவளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி ரயில்கள் பயணித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வார இறுதி நாட்களில் பயணிக்கவிருந்த அனைத்து விசேட ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இடையில் நாளை (30) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

ரயில்வே ஊழியர்களால் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்களை சேர்ந்த ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com