தமிழ் மக்களை ஏமாற்றாது சுமந்திரன் பதவி விலக வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது வந்துள்ளது. எனவே அவர் இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கட்டபிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியல் சாசனம் நிறைவேறாது போனால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்று பதவி விலகுவேன் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார். அவ்வாறு இல்லாது அரசியல் சாசனம் வெற்றிகரமாக நிறைவேற்றுப்பட்டிருந்தால் கூட தனது கடமை முடிந்து விட்டது. தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தாமாகவே கூறியிருந்தார்.அதுமட்டுமல்லாது தனது இராஜினாமா கடிதத்தில் அரைவாசி எழுதி விட்டதாகவும் மிகுதியே எழுத வேண்டியிருக்கின்றது என பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.இப்போது அவரது இராஜினாமா கடிதத்தின் மிகுதியையும் எழுதி முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தாம் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எப்பாடுபட்டும் பெற்றுக் கொடுப்பேன் என கூறி ஐவரால் தமிழ் மக்களுக்கு எதனையுமே பெற்றுக்கொடுக்க முடியவில்லை.மக்களுக்கு ஆக்கபூர்வமான விடயங்கள் எதனையும் செய்யவில்லை.தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை பாதுகாக்கும் வேலையை மட்டுமே செய்து வருகின்றார். இதனை தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு செய்ய வேண்டிய தேவையில்லை.அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டே செய்யலாம்.
எனவே, சுமந்திரன் கூறியது போல தனது ராஜினாமா கடிதத்தை முழுமைப்படுத்தி உடனடியாக பதவி விலக வேண்டும்.அவர் அரசியலில் இருந்து விலகினாலும் வெறுமனே தமிழ் மக்களின் அரசியலில் இருந்து மட்டுமே ஒதுங்குவார் என நினைக்கின்றேன். அவர் ரணிலை பாதுகாக்கும் பணியை ஐக்கிய தேசியக் கடசியில் இருந்து கொண்டு தொடரலாம்.ரணிலை காப்பாற்றிக் கொண்டு அவருக்கு சேவகம் செய்து வருவதால் இப்போது ஐக்கிய தேசியக் கடசிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்புக்கள் வந்துள்ளன.
0 comments :
Post a Comment