உளவு பார்க்கும் புறாக்கள்: அமெரிக்காவின் சிஐஏ வெளியிட்ட முக்கிய ஆவணங்கள். கோர்டன் கோரேரா
பனிப்போர் காலத்தில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்களின் பயணம் குறித்த ரகசிய தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
சோவியத் ரஷ்யாவின் முக்கியமான இடங்களை புகைப்படம் எடுக்கும் ரகசியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட புறாக்களுக்கு எவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டன என்பதை அந்த கோப்புகள் வெளிப்படுத்துகின்றன.
அதுமட்டுமின்றி, சோவியத் ரஷ்யாவின் திட்டங்களை ஒட்டு கேட்பதற்காக சிறிய சாதனங்களை வீசும் பணியில் காக்கைகளும், ஆழ்கடல் பயணங்களில் டால்பின்களும் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
தங்களது ரகசிய திட்டங்களை செயற்படுத்துவதற்கு பறவைகள் மற்றும் விலங்குகள் மிகவும் பொருத்தமானவை என்று சிஐஏ கருதுகிறது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள சிஐஏவின் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதியில்லை. இருப்பினும், நான் நேர்காணல் ஒன்றிற்காக அங்கு சென்றிருந்தபோது, பல்வேறு விதமான உளவு கருவிகளை விட ஒரேயொரு விடயம்தான் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆம், அதுதான் கேமரா பொருத்தப்பட்ட புறா.
இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் உளவு புறாக்களை பயன்படுத்தியது தொடர்பாக நான் புத்தகம் ஒன்றை எழுதி வருவதால் எனக்கு அதை பார்த்ததும் ஆர்வம் அதிகரித்தது. இருப்பினும், தங்களது உளவுப் புறாக்களின் பயண விவரங்களை சிஐஏ இன்னமும் வெளியிடவில்லை என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், தற்போது அதுகுறித்த அனைத்து விடயங்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
1970களில் டக்கானா எனும் குறியீட்டு பெயரை கொண்ட திட்டத்தின் கீழ், புறாக்களின் உடலில் சிறியளவிலான கேமராக்களை பொருத்தி, அதன் மூலம் தானியங்கியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக சிஐஏவின் புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து வந்தாலும் தான் எங்கிருந்து பயணத்தை தொடங்கினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன்படைத்த புறாக்களை கொண்டு இந்த அசாத்தியமான முயற்சிகள் சிஐஏவால் முன்னெடுக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் தொடர்பாடலில் புறாக்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், முதலாம் உலகப்போரின்போதுதான் முதல் முறையாக புறாக்கள் உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
அதற்கும் முன்னதாக, 1960களில் காகங்களை பயன்படுத்தி அதிகபட்சம் 40 கிராம் எடை கொண்ட பொருட்களை எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி, எடுத்து வருவது குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.
அதாவது, பறவைகள் செல்ல வேண்டிய இலக்குகளை சிவப்பு நிற லேசர் ஒளியை பாய்ச்சி குறிப்பதுடன், அவை திரும்ப வருவதற்கு தனியே மற்றொரு ஒளி அடிப்படையிலான முறை பயன்படுத்தப்பட்டது. மேலும், பயணம் செய்துக் கொண்டே இருக்கும் பறவைகளை கொண்டு சோவியத் ரஷ்யாவின் ரசாயன ஆயுதங்கள் குறித்த விவரங்களை திரட்டுவதற்கும் சிஐஏ முயற்சித்தது.
நாய்களின் மூளையை தூண்டும் வகையில் மின்சாரத்தை பயன்படுத்தியும், பூனைகளின் உடலுக்குள்ளே ஒட்டு கேட்பு கருவிகளை பொருத்தியும் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த மேலதிக தகவல்களை சிஐஏ வெளியிடவில்லை.
குறிப்பாக, டால்பின்களை பல வகையான உளவு வேலைகளில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. உதாரணமாக, எதிரி கப்பல்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னதாக, அவர்களின் கைவசம் உள்ள நீர்மூழ்கி கப்பலின் அமைப்பு, அதிலுள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அறிவதற்காக டால்பின்களின் உடலில் உணரிகள் (சென்சார்) பொருத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன.
மேலும், கப்பல்களில் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியிலும், பெற்று வரும் பணியிலும் டால்பின்கள் ஈடுபடுத்தப்பட்டன.
1967 வாக்கில் உளவுப் பணியில் டால்பின்களை ஈடுபடுத்தும் ஆக்ஸிகாஸ் திட்டம், பறவைகளுக்கான ஆக்ஸியோலைட் திட்டம் மற்றும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான கெச்செல் ஆகிய திட்டங்களுக்கு சிஐஏ ஆறு லட்சம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டது.
1970களின் மத்தியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளின் வாயிலாக கேமராக்கள் பொருத்தப்பட்ட பறவைகள் உளவுப் பார்ப்பதற்கு திறன்வாய்ந்த தெரிவு என்பது உறுதிசெய்யப்பட்டது.
குறிப்பாக, புறாக்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அக்காலத்தில் உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எடுத்த படங்களை விட தெளிவாக இருந்தததை வல்லுநர்கள் உறுதி செய்தனர்.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பல கட்ட சோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட சாத்தியக் கூறுகள் மட்டுமே. உண்மையிலேயே இவற்றை பயன்படுத்தி எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது? அதன் மூலம் தெரியவந்த விவரங்கள் என்னென்ன? என்பது குறித்து சிஐஏ இன்னமும் கூட ரகசியம் காக்கிறது.
பிபிசி தமிழிலிருந்து..
0 comments :
Post a Comment