முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர கைது
முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர்
பொலிஸ் நிதி மோசடி விசாரணைபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக பணிப்பாளர் கைது செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதற்கிணங்க அவர்களை உடனடியாக கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும், முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன பதுளை வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்ப்ட்டிருந்த நிலையிலேயே, அங்கு சென்ற எப்.சி.ஐ.டி.யின் இருவேறு சிறப்புக் குழுக்கள் அவர்களைக் கைது செய்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் சி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி.க்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.டி.பிரியந்த ஆகியோரின் மேற்பார்வையில் எப்.சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சர் அனுர பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய விசாரணை அறை இலக்கம் 8 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் ஊடாக குறித்த இருவரிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களது கைது மற்றும் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாளை எப்.சி.ஐ.டி. அதிகாரிகள் கோட்டை நீதிவானுக்கு விஷேட அறிக்கையை சமர்ப்பித்து அவ் விருவர் குறித்தும் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மனைக்க உள்ளதாக எப்.சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment