Friday, September 20, 2019

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் ஜாதிப்பிரச்சினை.. அய்யோ நானே பிறேமதாஸவிற்கு உதவியவன் என்கின்றார் ரணில்..

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது இர ண்டாக பிளவுபட்டு நிற்கின்றது. வேட்பாளர் நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அக்கட்சியில் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிறேமதாஸ பல்வேறு வழிகளில் நெருக்குதல்களை கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி ஜாதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாக பாரிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜாதி பிரச்சினை காரணமாகவா சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற கேள்வி முக்கிய அமைச்சர் ஒருவரால் காரசாரமாக எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க 'தான் ஜாதி அடிப்படையில் செயற்படும் நபரில்லை என்றும் தானே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாவதற்கு உதவியதாகவும் மேலதிகமாக 2010ம் ஆண்டில் சரத் பொன்சேகாவிற்கு தான் ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.'

எவ்வாறெனினும் சஜித்தின் தந்தை ஆர். பிரேமதாசவிற்கு எதிராக கிளர்ச்சி செய்த காமினி திஸாநாயக்கவின் புதல்வர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வரும் தரப்பின் முக்கியமானவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த இரண்டு அமைச்சர்களில் ஒருவராக நவீன் திஸாநாயக்க திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சஜித் பிரேமதாசவை சேர் என விளிப்பதற்கு சில உயர் சாதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த அண்மையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment