ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே! வை எல் எஸ் ஹமீட்
ஜனாதிபதித் தேர்தலில் மூவருக்குமேல் போட்டியிடும்போது ஒருவர் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்கட்கு 1,2, 3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது தெரிவுக்கு புள்ளடியும் ஏனையவற்றிற்கு இலக்கங்களும் இடலாம். ( x,2,3).
1,2,3 என இலக்கமிடவேண்டுமென ஒரு வழிகாட்டி மட்டும்தான் Third Shedule (ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம்) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்றுதான் வாக்களிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை.
அதேநேரம் பிரிவு 51(2) இன்படி ஒரு வாக்காளர் தாம் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்; என்ற எண்ணத்தை அவரது வாக்குச்சீட்டில் கீறப்பட்ட அடையாளம் பிரதிபலிக்கின்றது; என்று திருப்திகண்டால் அதனை ஏற்கவேண்டும். (ஆனாலும் 1,2,3 என எழுதுவது சிறந்தது.)
அதேபோல், விரும்பினால் ஒருவருக்கு மட்டும் வாக்களித்து விட்டு ஏனைய இலக்கங்களை விட்டுவிடலாம். அல்லது இருவருக்கும் வாக்களிக்கலாம். மூவருக்கும் வாக்களிக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. ( இவற்றைக் குறிப்பிடக் காரணம் பலர் பின்னூட்டம் மற்றும் inbox இல் இவ்வாறான கேள்விகளை நிறையவே கேட்கின்றார்கள்.)
ஒருவர் முதலாம் இலக்கத்தை எழுதாமல் அல்லது புள்ளடி இடாமல் 2 என்றோ அல்லது 3 என்றோ அல்லது 2,3 என்றோ எழுதினால் வாக்கு நிராகரிக்கப்படும். [பிரிவு 51(1)(e)(111)]
இதன்மூலம் புரிந்துகொள்வது முதலாவது வாக்கு மாத்திரமே வாக்காகும். ஏனையவை விருப்பத்தெரிவு வாக்குகளா? என்ற கேள்வியை எழுப்பினால் பதில் “ இல்லை” என்பதாகும். ஏனெனில் அவை நேரடியாக எண்ணப்படுவதில்லை. பதிலீடாகத்தான் எண்ணப்படுகின்றன.
அதாவது, பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற மூன்று விருப்பத் தெரிவு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இங்கு அவ்வாறு இல்லை. ஆனால் சிலநேரம் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக எண்ணப்படலாம்; விருப்பத் தெரிவு வாக்காக அல்ல.
சுருங்கக்கூறின் ஒவ்வருக்கும் முதலாவது தெரிவு மட்டுமே வாக்கு.
சிலநேரம் அவருடைய முதலாவது வாக்குக்குப் பதிலாக இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக மாறலாம். சுருங்கக்கூறின் ஒருவருக்கு முதலாவது தெரிவு, வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு இரண்டாவது தெரிவு, வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு மூன்றாவது தெரிவு, வாக்காக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் மூன்று தெரிவும் அல்லது இரண்டு தெரிவுகள் வாக்காக அமைய முடியாது. ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே
இது எவ்வாறு எனப்பார்ப்போம்.
வாக்கெண்ணும் முறை
முதலாவது சுற்றில் முதலாவது வாக்கு எண்ணப்படும். ஒருவர் 50% ஐத் தாண்டினால் அவர் ஜனாதிபதி. யாரும் 50% ஐத் தாண்டாதபோது இரண்டாம் சுற்று எண்ணிக்கை.
மூன்றாம் சுற்று எண்ணிக்கை என்ற ஒன்று இல்லை. சிலர் நினைக்கின்றார்கள்; இரண்டாம் சுற்றில் இரண்டாம் வாக்கு எண்ணப்பட்டு அதிலும் யாரும் 50% பெறாவிட்டால் மூன்றாவது சுற்றில் மூன்றாம் வாக்கு எண்ணப்படுமென்று. இது பிழையாகும்.
முதலாவது சுற்றில் முதலாம் வாக்கின் அடிப்படையில் ஒவ்வொருவரும் பெற்றவாக்குகள் கூட்டப்படுவதோடு அவர்களது வாக்குச் சீட்டுக்கள் வெவ்வேறாக கட்டப்படும்.
இப்பொழுது முதல் இரு வேட்பாளர்களைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
உதாரணமாக
A,B,C,D,E என்ற ஐந்து வேட்பாளர்களில் C,D,E போட்டியில் இருந்து நீக்கப்பட்டபின் மீண்டும் அவர்களது கட்டப்பட்ட வாக்குள் அவிழ்க்கப்பட்டு அவற்றில் A அல்லது B இற்கு இரண்டாவது வாக்குகளை யாரும் வழங்கியிருந்தால் அவை A அல்லது B யின் வாக்குகளோடு கூட்டப்படுவதுடன் அந்த வாக்குச் சீட்டுக்களும் A அல்லது B யின் வாக்குச் சீட்டுகளுடன் கட்டப்படும்.
அதன்பின் C,D,E யின் எஞ்சிய வாக்குகளில் A அல்லது B யிற்கு யாராவது தமது மூன்றாவது வாக்கை அளித்திருந்திருந்தால் மேற்கூறியதுபோன்று அவையும் கூட்டப்பட்டு உரியவரின் வாக்குகளுடன் கட்டப்படும். ( அதாவது இவர்கள் தமது இரண்டாவது வாக்கை C,D,E ஆகியோருக்குள் தாம் முதலாவது வாக்கை வழங்காத ஒருவருக்கு கொடுத்திருப்பார்கள். அது பிரயோசனமற்ற வாக்கு).
இப்பொழுது யார் அதிகூடிய வாக்குப் பெற்றிருக்கின்றாரோ அவரே வெற்றியாளர்.
எனவே, 50% என்ற ஒன்று அவசியமில்லை. முதலாவது சுற்றில் 50% இற்கு மேல் பெற்றிருந்தால் அதன்பின் இரண்டாம் மூன்றாம் வாக்குகளை எண்ணவேண்டுமென்ற அவசியமில்லை. காரணம் ஏனைய அனைவருமே அடுத்தவருக்கு தமது இரண்டாம் அல்லது மூன்றாம் வாக்கை அளித்திருந்தாலும் அவை 50% ஐத் தாண்டமுடியாது.
இதன் யதார்த்தத்தைப் பாருங்கள்.
நாம் அளிக்கின்ற முதலாவது வாக்கைப் பொறுத்தவரை பிரதான இரு வேட்பாளரை விடுத்து ஏனைய வேட்பாளர்கட்கு அளிக்கின்ற வாக்கிற்கு எந்தப் பெறுமதியுமில்லை. பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு அளித்தால் ஒன்றில் ஒருவர் தெரிவுசெய்யப்படுவது தடுக்கப்படலாம். அடுத்தவர் தெரிவுசெய்யப்பட அது உதவலாம்.
இப்பொழுது இரண்டாம் வாக்கிற்கு வருவோம்.
Aயும் Bயும் பிரதான வேட்பாளர்களெனில் அவர்களிலொருவருக்கு முதலாம் வாக்கை இடுபவர் அவரது ஏனைய இரு வாக்குகளையும் யாருக்கு அளித்தாலும் அதற்கு எதுவித பெறுமதியும் இல்லை. அவை எண்ணப்படப் போவதுமல்லை. இவரைப் பொறுத்தவரை இவரது முதலாவது தெரிவு மட்டுமே வாக்காகும். ஏனெனில் அவரது வாக்குச்சீட்டு அவர் வாக்களித்த பிரதான வேட்பாளருக்குரிய வாக்குச்சீட்டாக கட்டிவைக்கப்படும். இரண்டாம் சுற்றில் அது அவிழ்க்கப்படவே மாட்டாது.
இப்பொழுது இவர் 1,2,3 என மூவருக்கு இலக்கமிட்டிருந்தாலும் இவரது வாக்கு ஒன்றே. சிலர் நமக்கு மூன்று வாக்குகள் இருப்பதால் இம்முறை யாரும் 50% பெறாத சூழ்நிலையில் ஏனைய வாக்குகளையும் பாவிக்கவேண்டுமென்று முகநூல்களில் கூறுகின்றார்களே! அது சரியா? என சிந்தியுங்கள்.
எனவே, பிரதான வேட்பாளர் இருவரில் ஒருவருக்கு வாக்களிப்பவர்களைப் பொறுத்தவரை முதலாவது வாக்கு மட்டும்தான் வாக்காகும். ஏனைய வாக்குகளைப் பாவிப்பதால் பாதிப்புமில்லை; நன்மையுமில்லை.
பிரதான வேட்பாளர்களல்லாதவர்க்கு ( C,D,E) வாக்களிக்கும்போது:
இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற முதலாவது வாக்கினால் எதுவித பிரயோசனமுமில்லை இத்தேர்தலைப் பொறுத்தவரை. ஆனால் இவர்கள் ( உதாரணமாக முஸ்லிம்கள்) எமது கட்சிக்கு இவ்வளவுதூரம் வாக்களித்தார்கள் என்ற நன்றிக்கடன் சிலவேளை இருக்கலாம். அதேநேரம் அதிகரித்த அந்த வாக்கைக் காட்டி பொதுத்தேர்தலில் தனது வாக்கு வங்கியை மேலும் அதிகரிக்க அவர்கள் முற்படலாம்.
மறுபுறம் நாம் யாரின் தெரிவை தவிர்க்க நினைக்கின்றோமோ அவருக்கெதிராக அடுத்த பிரதான வேட்பாளரின் வாக்கை அதிகரிக்க அவ்வாக்குப் பாவிக்கப்படாமல் போகிறது. அதன்மூலம் நாம் விரும்பாத வேட்பாளரின் வெற்றிக்கு உதவுகின்றோம்.
இந்தப்பாதிப்பை இந்த இரண்டாவது வாக்கு ஈடு செய்யும்.
அதாவது உதிரி வேட்பாளர்கட்கு நாம் அளித்த முதலாவது வாக்கு பிரயோசனமற்றுப்போக இப்பொழுது இரண்டாவது வாக்கை நமது வாக்காகப் பயன்படுத்தலாம்.
இரண்டாவது வாக்கு
நாம் A தோற்கடிக்கபடவேண்டுமென விரும்புகிறோமெனில் முதலாவது வாக்கை உதிரி வேட்பாளர்களுக்கு அளித்தருந்தால் எமது 2வது வாக்கை கட்டாயம் Bயிற்கு அளித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டால் முதலாவது வாக்கை உதிரிகளுக்கு அளித்ததன்மூலம் Bயின் வாக்குகள் கூடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமை Aயின் வெற்றிக்கு உதவுவதாக அமையும்.
B யிற்கு அளிக்கப்படும் இரண்டாவது வாக்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாத நிலையிலேயே உதவும்; என்பதையும் கவனத்திற்கொள்வோம்.
இப்பொழுது முதலாவது சுற்றிலேயே நாம் தோற்கடிக்க விரும்பும் A, 50% பெற்றுவிட்டார்; எனக்கொள்வோம். நாம் B யிற்கு முதலாவது வாக்கை அளித்திருந்தாலும் A யின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. நமது வாக்குகள் இல்லாமலேயே அவர் 50% பெற்றுவிட்டார்.
இங்கு எழும் பிரச்சினை இரண்டு: ஒன்று அவருடைய எந்த இனவாதத்திற்காக நாம் அவரைத் தோற்கடிக்க நினைத்தோமோ அந்த இனவாதத்தில் அவர் இன்னும் மூர்க்கத் தனமாக இருப்பார். ஏனெனில் அவருக்கு வாக்களித்தவர்கள் அவரது இனவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். எனவே, அவர்களைத் திருப்திப்படுத்த நம்மீது இனவாதக் கணைகள் வீசப்படும். மறுபுறம் அவருக்கு வாக்களிக்கவில்லை; என்கின்ற அவரது வெஞ்சினம் நம்மீது தீயாகக்கொட்டும்.
இப்பொழுது சிந்தியுங்கள், நாம் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது; எனத் தீர்மானிக்கின்ற நேரம் வந்துவிட்டதா? இன்னும் வேட்புமனு கையளிக்கப்படவில்லை. மக்களின் சரியான உணர்வை அறிய இன்னும் நேரமிருக்கிறது. இந்நிலையில் விடியமுன்னே தீர்மானம் எடுத்து முகநூல்களில் பட்டிமன்றம் நடாத்தும் சகோதரர்களே சிந்தியுங்கள்.
இரண்டு, சிறுபான்மை இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம்; என்ற எண்ணப்பாடு பொதுவாக பெரும்பான்மை சமூகத்திடம் உறுதிபெறும். விளைவு எதிர்காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் இனவாதத்தைக் கையிலெடுக்கத் தொடங்குவார்கள்.
அதன்பின், ஒரு ஜனநாயக நாட்டில் அரசு என்பது “ மக்களால் மக்களுக்காக செய்யப்படும் மக்களாட்சி “ என்பது மாறி “ பெரும்பான்மை சமூகத்தால் பெரும்பான்மை சமூகத்திற்காக செய்யப்படும் பெரும்பான்மை சமூக ஆட்சி” என்ற பதம் நிலைபெறும்; என்பதையும் அதன் விளைவுகளையும் கவனத்திற்கொள்க. நாம் எந்த நாட்டிற்கு சென்று வாழ்வது என்பதையும் சிந்திக்குக.
மூன்றாவது வாக்கு:
நீங்கள் முதலாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் ஏனைய இரு வாக்குகளை யாருக்கு இலக்கமிட்டாலும் பெறுமதியில்லை. உங்கள் வாக்கு ஒன்றே!
முதலாவது வாக்கை உதிரிகளுக்கு இட்டால் இரண்டாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் அதுதான் உங்கள் வாக்கு. ஏனையவை வெறும் இலக்கங்களே! எனவே, மூன்றாவது வாக்கை யாருக்கு அளித்தாலும் பிரயோசனம் இல்லை.
முதல் இரு வாக்குகளையும் உதிரிகளுக்கு அளித்தவர்கள் மூன்றாவது வாக்கை ஒரு பிரதான வேட்பாளருக்கு அளித்தால் அதற்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாதபோது பெறுமானமிருக்கும். அதுதான் உங்களது வாக்காகும்.
எனவே, ஒருவருக்கு வாக்கு ஒன்றே. மாறாக மூன்று என்றால் வாக்காளர்கள் ஒரு கோடி அறுபது லட்சமென்றால் வாக்குகள் நான்கு கோடி எண்பது லட்சமாக வேண்டும். அவ்வாறு இல்லை.
பாராளுமன்றத் தேர்தலிலும் கட்சிக்கு அளிப்பது மாத்திரமே வாக்கு. ஆனாலும் விருப்பத் தெரிவு வாக்குகள் மூன்று. அந்த மூன்றையும் அங்கு மூவரைத் தெரிவுசெய்யப் பாவிக்கலாம்.
இங்கு வாக்கும் ஒன்று. தெரிவுசெய்வதும் ஒருவரையே!
இதனை ஒரு கிராமிய, பாமரப்பாணியில் கூறுவதாக இருந்தால், நாம் முதலாவது வாக்கை ஒருவருக்கு அளித்துவிட்டுக் கூறுகின்றோம்; இவர் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் எனது முதலாவது வாக்குத் ‘துப்பல்’; எனது இரண்டாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.
அடுத்ததாக கூறுகின்றோம்; அவரும் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் அதுவும் ‘ துப்பல்’ மூன்றாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.
எனவே, சிந்தித்து யார் குறைந்த பாதிப்பானவர், யாரை நாம் எவ்வளவு ஒன்று பட்டாலும் தோற்கடிக்கவே முடியாது; ( அவ்வாறான ஒரு சூழ்நிலை இருந்தால்) என்பவற்றைக் கவனத்திற்கொண்டு உங்கள் வாக்குகளின் பெறுமதி உணர்ந்து செயற்படுங்கள்.
உங்கள் புரியாமை, அறியாமை, மேலெழுந்த வாரியான சிந்தனை இந்த சமூகத்திற்கு தீங்காக மாறிவிடவேண்டாம். இறைவன் நமக்கு சரியான வழியைக் காட்டட்டும்.
0 comments :
Post a Comment