Tuesday, September 24, 2019

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிவாரணப் பணிகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முப்படையினரின் ஒத்துழைப்புடன் துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளுக்கு நிதியை தடையாகக்கொள்ள வேண்டாமென தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, தேவையான நிதியினை நிதி அமைச்சிடம் கோரும்படியும் தான் தலையிட்டு அந்த நிதியை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்ட அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

இன்னும் இரண்டு மாத காலம் வரை அதிக மழையுடன்கூடிய காலநிலை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன் ஆயத்தங்களுடன் அந்த சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் துறைகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.

அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போதும் தடையின்றி அவசர அனர்த்த நிலைமைகளை சமாளிப்பதோடு மக்களுக்கான நிவாரண செயற்பாடுகளை முறையாக மேற்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இதன்போது கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடும் மழையினால் காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருப்பது தெரியவந்துள்ளதுடன், அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் பற்றி மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கடந்த காலங்களில் நிலவிய வரட்சி காரணமாக சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் அதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படை தளபதிகள், பதிற் கடமை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment