200 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோருக்கு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ஸ, சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து மஹிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையை முன்னெடுத்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் முன்னெடுத்த விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு விடுத்த வேண்டுகோளை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ 2005 ஆம் ஆண்டு இரட்டை பிராஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா விநியோகப்பிரிவின் உத்தியோகத்தர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் வினவிய போது, அது தொடர்பான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment