இரணைமடு குள வௌ்ள அனர்த்தம் தொடர்பான வௌ்ள அனர்த்த ஆரம்ப புலனாய்வு அறிக்கையின் மும்மொழிப் பிரதி வடமாகாண ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இரணைமடு வௌ்ள அனர்த்தம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வட மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கையின் மூன்று மொழிகளிலுமான மொழிபெயர்ப்புப் பிரதிகளே ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த ஆரம்ப புலனாய்பு அறிக்கையின் பிரகாரம், இரணைமடு குளத்தின் வௌ்ள அனர்த்தத்தினால் 64.25 மில்லியன் ரூபா அரச சொத்துக்களுக்கும் 3342 .99 மில்லியன் ரூபா பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தொழில்நுட்ப உத்தியோகத்தர் 21.12.2018 அன்று இரவு சுழற்சி முறைத்திட்டத்திற்கு அமைவாக கடமைக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தும் அன்றைய தினம் எழுத்து மூலமான அனுமதி பெறாது விடுமுறையில் சென்றுள்ளதாக புலனாய்வுக் குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த மூன்று அதிகாரிகள் மீதும் நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இரணைமடு குளத்திற்கு அருகில் ஒரு உத்தியோகத்தருக்கான விடுதி காணப்படுகின்ற போதிலும் அதில் பொறியியலாளர் தங்கி நின்று கடமையாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் உரியவர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், அதற்கான முழுப்பொறுப்பினையும் நீர்ப்பாசன பணிப்பாளரும் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீர்ப்பாசன பொறியியலாளராக செயற்பட்டவர் பாரிய குளத்தினை முகாமை செய்த அனுபவத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர் தனது வாக்குமூலத்தின் பிரகாரம் தெரியப்படுத்தியுள்ளார்.
பருவப்பெயர்ச்சி மழை காலங்களில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடல் வேண்டும் என மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் நிலையியற்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைய, குளத்தின் நீர்மட்டம் வௌ்ள அனர்த்தம் ஏற்பட்ட 22 ஆம் திகதி காலை 36 அடி 3 அங்குலமாக உயர்வடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஒரு பராமரிப்பு ஊழியரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலையியற்கட்டளையின் பிரகாரம் நீர் மட்டத்தினை அளவீடு செய்வதற்கும் அது தொடர்பான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கும் ஒரு பராமரிப்பு ஊழியரின் வகிபாகம் என்பது பேதுமானதாகக் காணப்படவில்லை எனவும், பொருத்தமான
தொழில்நுட்ப உத்தியோகத்தரை பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இரணைமடு குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.
இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயர்த்தப்பட்டதுடன், குளத்தின் நீர் கொள்ளளவும் விஸ்தீரனமாக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment