திவிநெகும வழக்கு: நீதிபதியை மாற்றக் கோரும் பசில் ராஜபக்ஸவின் மனு நிராகரிப்பு
திவிநெகும வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஷிரான் குணவர்தன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பசில் ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவில் எவ்வித சட்டப்பூர்வ தன்மையும் இல்லை என அறிவித்த நீதிபதிகள் அதனை நிராகரித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 இலட்சம் ரூபா நிதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்காது, வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு பசில் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை தொடர்ந்தும் நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment