Thursday, September 12, 2019

கோத்தபாய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றினால் விடுதலை

எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு தொடர்பில் இந்த தீர்ப்பு, அச்சல வென்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாமினால் வழங்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, எவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழு தான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு சட்ட விரோதமானது என தெரிவித்து தன்னுடைய சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவை நிராகரித்து தொடர்ந்தும் வழக்கை நடத்திச் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பு சட்டவிரோதமானது என தெரிவித்து தான் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு ஒன்றை தாக்கல் செய்த போதும், குறித்த மனுவையும் நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக குறித்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மற்றும் குறித்த உத்தரவிற்கு எதிரான அடிப்படை மனுவை நிராகரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் ரத்துச் செய்தது.

இதேவேளை, போதிய அளவு சாட்சி இருந்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிய முறையில் வழக்கு தொடர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முடியும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு ஒன்றினை விடுத்து குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com