இலங்கைக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எந்த எல்லைக்கும் சென்று உதவத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்த பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஷஹீட் அஹ்மட் ஹஸ்மத், இது இலங்கைக்கு மாத்திரம் நாம் காட்டுகின்ற விசேட அக்கறையல்ல. மாறாக அது எமது தார்மீகப் பொறுப்பாகும் என்றும் கூறுனார்.
கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டல் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாக்கிஸ்தானின் பாதுகாப்புதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கை மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான நட்பறவு என்பது மிகவும் உறுதியானதாகும். அது மிகவும் பெருமைக்கும் உரிய விடயமாகும். அதேபோன்று இலங்கையின் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிப்போர் குறித்தும் நாம் பெருமையடைகின்றோம். மேலும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்ற போது நாம் உதவியதைப் போன்று தற்போதும் இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எந்த எல்லைக்கும் சென்று உதவத் தயாராக இருக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அனைத்து விதங்களிலும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோம். பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், புலனாய்வு அடிப்படையிலும், மேலதிக விசாரணைகள் தொடர்பிலும், எதிர்கால நகர்வுகளிலும் நாம் இலங்கைக்கான எமது பங்களிப்பையும், ஒன்றிணைவையும் உறுதிப்படுத்தியிருக்கிறோம்.
அதேபோன்று அனைத்துத்துறை சார்ந்த உயர்கல்வி நடவடிக்கைகளுக்கும் இலங்கை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இலங்கைக்காக எமது மனங்களும், எண்ணங்களும், நிறுவனங்களும் எப்போதும் திறந்தேயிருக்கின்றன என்றும் கூறினார்
0 comments :
Post a Comment