Thursday, September 12, 2019

கல்விக்கு அதிகூடிய நிதி ஒதுக்கிய பிரதமர் நானே - ரணில்

கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன். எதிர்காலத்திலும் இந்த கல்வித் துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை நான் ஒதுக்க தயாராக இருக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கட்டிட திறப்பு விழாவும் இன்று (12) காலை 10.30 மணி அளவில் பாடசாலையின் அதிபர் என்.எம். சாபி தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருத்தினராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கௌரவ விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டுடனர்.இதன் போது இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நூற்றுக்கும் அதிகமாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இந்த பிரதேசத்திலே இருக்கின்றார்கள். இந்த பாடசாலையில் ஜே.ஆர். என்கின்ற கட்டிடம் ஒன்று இருக்கின்றது.

அதனை மீண்டும் நிர்மானித்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன். இந்த பிரதேசத்தில் இருக்கின்ற சிறந்த கல்வி கண்ணாக, இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த பாடசாலையை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.மேலும், இப்பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு உட்பட பாடசாலையின் அபிவிருத்திக்காக பலர் என்னிடம் வந்து உதவிகளை கேட்டிருந்தார்கள்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சருடனும் ஆலோசித்து குறித்த அபிவிருத்திப் பணிகளுக்காக நிதியை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன். கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன்.
1978 இல் இருந்து பல்வேறு அபிவிருத்திகளை செய்து இந்த கல்வித் துறைக்கு வித்திட்டவனாக நான் இருக்கின்றேன். எதிர்காலத்திலும் இந்த கல்வித் துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை நான் ஒதுக்க தயாராக இருக்கின்றேன்.13 வருட பாடசாலை வாழ்க்கையை மாணவர்களுக்கு வழங்கி நல்லதொரு அறிவியல் சமூகத்தை உருவாக்குவதற்காக எதிர்காலத்திலே நல்லதொரு திட்டங்களை முன்வைத்துள்ளேன்.

தகவல் தொழில்நுட்பத்தை விருத்தி செய்வதற்காக நல்ல விடயங்களை இந்த அரசாங்கம் எடுத்துள்ளது. பட்டதாரி கல்வியற் கல்வி பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்த மாணவர்களுடைய வகுப்பறைகளையும் வழங்கக்கூடாது என்கின்ற திட்டத்தை கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ளது.

அதற்கு நாங்கள் அனுமதிகளை வழங்கி இருக்கின்றோம். பாடசாலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கல்வி மயமாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும். ´அண்மையில் உள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை´ என்ற தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் அகிலவிராச் காரியவசம் அவர்கள் பாடசாலைக்கு உபகரணங்கள், கட்டிடங்கள் என்பவற்றை வழங்கி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னைடுக்கின்ற அமைச்சராக இருக்கின்றார்.

அவருக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த வாரம் விசேட தேவையுடையவர்களுக்கான ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக விசேட தேவையுடையவர்களுக்கும் கல்வி போய் சேர வேண்டும். மேலும் 21 பல்கலைக்கழங்களில் 21 பல்கலைக்கழக பீடங்கள் அண்மையிலே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்படியான அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அமைச்சர் றிஷாட் பதியுதீன் முக்கியமாக இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். வீதி அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, பாடசாலைக்கு கட்டிடங்களை கொண்டு வந்து சேர்ப்பது, எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்தில் அதுவும் மன்னாரிலே சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com