ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முடியுமா? வை எல் எஸ் ஹமீட்
ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதற்கும் அதற்கு வசதியாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கும் ரணில், மஹிந்த, மைத்திரி ஆகியோர் முன்னெடுப்பொன்றைச் செய்வதாக செய்திகள் உலாவருகின்றன.
இம்மூவரைப் பொறுத்தவரையும் ஜனாதிபதிப் பதவி தலையிடியானதொன்று என்பது அனைவரும் அறிந்ததே!
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் என்பது நமக்குத் தெரியும். ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு கூடாத, ஒரு மாதத்திற்குக் குறையாத காலப்பகுதிக்குள் நடாத்தப்படவேண்டும். சரத்து 31(3)
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஜனவரி எட்டாம் திகதி முடிவடையும். எனவே, தேர்தல் டிசம்பர் எட்டாம் திகதிக்கு முன்னரான அதேநேரம் நவம்பர் எட்டாம் திகதிக்கு முற்படாத ( அதாவது 08/11/2019 இற்கும் 08/12/2019 இற்கும் இடைப்பட்ட) ஒரு திகதியில் நடாத்தப்பட வேண்டும். இதனடிப்படையில்தான் டிசம்பர் 7ம் திகதியை தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் அடிக்கடி குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒரு சட்டத்தைத் திருத்துதல்
ஒரு சட்டமூலம் (அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதன்பின்) வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவேண்டும். (சரத்து 78) அதிலிருந்து இரு வாரங்களின்பின் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவேண்டும். அதிலிருந்து ஒரு வாரத்திற்குள் எந்தவொரு பிரஜையும் அச்சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம்.
சவாலுக்குட்படுத்தும் அடிப்படைகள்.
எந்தவொரு சட்ட மசோதாவையும் சவாலுக்குட்படுத்தும் ஒரேயொரு அடிப்படை இம்மசோதா அரசியலமைப்பிற்கு முரண் என்பதாகும்.
அரசியலமைப்பைப் பொறுத்தவரை இரு வகையான சரத்துக்கள் இருக்கின்றன. ஒரு வகை: அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் திருத்தலாம். இன்னுமொரு வகை: மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கைடுப்பும் தேவை: சரத்து 83 இன் பிரகாரம் பின்வருவன இவ்வகையான சரத்துக்களாகும்.
சரத்துக்கள்: 1,2,3,6,7,8,9,10, 11,30(2) ( இது ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறிக்கிறது), 62(2) ( இது பாராளுமன்றப்பதவிக்காலத்தைக் குறிக்கிறது) இந்த இரு பதவிக்காலத்தையும் நீடிக்கின்ற திருத்தம்;
இந்த சர்வஜன வாக்கெடுப்பின் தேவையை கோருகின்ற இச்சரத்துக்கள் சரத்து 83 இல் குறிப்பிடப்பட்டுள்ளதால் அச்சரத்தைத் திருத்துவதற்கும் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை ( இந்த சரத்து 83ஐ சற்று ஊன்றி வாசியுங்கள்; ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா? இல்லையா? என்பது இந்த சரத்து 83இல்தான் தங்கியிருக்கின்றது.
ஒரு சாதாரண சட்ட/ சட்டத்திருத்தத்திற்கான மசோதாவை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தும்போது உயர்நீதிமன்றம் அம்மசோதா அரசியலமைப்பிற்கு முரண்படவில்லை; எனக் கூறலாம். அல்லது
சரத்து 83இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்கள் தவிர்ந்த வேறு ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சரத்துக்களுடன் குறித்த மசோதா அல்லது அதன் சில பகுதிகள் முரண்படுகின்றது, அல்லது முரண்படுகின்றன; எனக்கூறலாம்.
அவ்வாறு முரண்படுமாயின் இரு வகையான தீர்வை முன்வைக்கலாம்: ஒன்று: குறித்த வசனங்களை நீக்கினால் அல்லது இவ்வாறு திருத்தினால் முரண்படாது. அதன்பின் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றலாம்; என்பதாகும். இரண்டு: 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றவேண்டும்; என்பதாகும்.
அதேநேரம் அம்மசோதா, மேலே சரத்து 83இல் கூறப்பட்ட ஏதாவதொரு சரத்துடன் முரண்பட்டால் சில நேரம் நீதிமன்றம் திருத்தத்தை முன்வைக்கலாம் அல்லது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரலாம்.
அவதானம் செலுத்துக
இங்கு குறிப்பிடுவது சாதாரண சட்டத் திருத்தமாகும். சாதாரண சட்டத் திருத்தத்திற்குக்கூட சிலவேளை 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என நீதிமன்றம் கூறலாம்; என மேலே பார்த்தோம். ஆனாலும் அது சாதாரண சட்டமே. 2/3 ஆல் நிறைவேற்றியதால் அல்லது சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தியதால் அது அரசியலமைப்புச் சட்டத்தில் சேராது.
எனவே, அவ்வாறு 2/3 பெரும்பான்மையாலும் சர்வஜன வாக்கெடுப்பாலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சாதாரண சட்டத்தை பின்னர் நீக்குவதாக இருந்தால் சாதாரண பெரும்பான்மை போதும். சரத்து 84(3)
இதற்குப் பின்னால் உள்ள தத்துவம் என்னவென்றால் இச்சட்டம் அமுலுக்கு வரும்போது அரசியலமைப்பின் குறித்த சரத்துக்களில் தாக்கம் செலுத்துகின்றது. அதனை நீக்கும்போது அரசியலமைப்பு பழைய நிலைக்கு வருகிறது. அத்தாக்கம் இல்லாமல் போகிறது. தாக்கத்தை ஏற்படுத்த விசேட அனுமதி தேவை. தாக்கத்தை இல்லாமலாக்க சாதாரண அனுமதி போதும்.
உதாரணமாக, அரசியலமைப்பு தடுத்த ஒரு விடயத்தை இச்சட்டம் அனுமதிக்கலாம். அதற்கு மக்கள் ஆணை தேவைப்படலாம். அதனை நீக்கும்போது அரசியலமைப்புச் சட்டம் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் “ சாதாரண பெரும்பான்மையால் நீக்கிவிடலாம்” என்று சரத்து 84(3) கூறுகிறது.
இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்; புதிய மாகாணசபைச் சட்டத்தை நீக்கிவிட்டு பழைய தேர்தல்முறைக்குச் செல்வதற்கு 2/3 தேவையா? நிச்சயமாகத் தேவையில்லை. சிலர் புரியாமல் தேவை என்கிறார்கள். சிலர் புரிந்தும் மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போட ஒரு சாட்டாக 2/3 தேவை என்கிறார்கள்.
அரசியலமைப்புத் திருத்தம்
அரசியலமைப்புத் திருத்தமாயின் 2/3 பங்கு சுயமாகத் தேவை. நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவது மேலே கூறப்பட்ட சரத்து 83 இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்களுடன் முரண்படுகின்றது; என்பதாகும். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும்.
ஜனாதிபதிப் பதவியை ஒழித்தல்
மேற்கூறிய மூவரும் ஜனாதிபதிப் பதவியை ஒழிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அவர்களது சொந்தக்கட்சியில் உள்ளவர்களே அதனை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க எப்படியோ 2/3 ஐப் பெறுகிறார்கள்; என வைத்துக்கொண்டால் இம்மூவரும் இணைந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதும் சிரமமாகாது. ( ஜனாதிபதி பதவியை ஒழிக்க 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை).
அவ்வாறாயின் பிரச்சினை என்ன? பிரச்சினை காலஅவகாசம்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. சட்டமூலத்தை வரைந்து அமைச்சரவை அனுமதி பெறுவதற்கு ஒரு வாரம், வர்த்தமானியில் பிரசுரித்தபின் ஒழுங்குப்பத்திரத்தில் சேர்ப்பதற்கு இருவாரங்கள், சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தப்படுவதால் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தும்நிலை எழாது. எனவே ஆகக்கூடியது ஐந்து வாரங்களுக்குள் 2/3 ஆல் நிறைவேற்றலாம்.
அதன்பின் சபாநாயகர் கையொப்பம் வைத்ததும் ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரகடனம் வெளியிட வேண்டும். அதிலிருந்து ஒரு மாதத்தின் பின் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும். அதன்பின் ஜனாதிபதி கையொப்பமிடவேண்டும். அத்துடன் ஜனாதிபதிப் பதவி ஒழிந்துவிடும்.
எனவே, சட்டரீதியாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் தாராளமாக ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கலாம். சர்வஜன வாக்கெடுப்பு முடிவடைந்து ஜனாதிபதி கையொப்பம் வைக்கும்வரை தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான நடைமுறைகளை செய்தே ஆகவேண்டும்.
சிலவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு குறிக்கப்பட்ட திகதிக்குமுன் சர்வஜன வாக்கெடுப்பு முடிவடையாவிட்டால் குறித்த திகதியில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும். ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பைக் காரணம்காட்டி தேர்தலை ஒத்திப்போடமுடியாது. சர்வஜன வாக்கெடுப்பு நிறைவேறிவிட்டால் தேர்தல் நடவடிக்கை தானாகவே செயலிழந்துவிடும்.
இங்கு கேள்வி, சட்டரீதியாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க முடியுமென்றபோதிலும் அரசியல்ரீதியாக அது சாத்தியமா? என்பதாகும்.
ஒரு புறம் ஜனாதிபதியை சம்மதிக்க வைக்கவேண்டும்; என்றால், அடுத்த அரசாங்கத்தில் அவருக்கு ஓர் உயர்பதவி கோருவார். இல்லையெனில் அவரது கட்சி பா உ க்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். மட்டுமல்ல, 2/3 ஆல் நிறைவேற்றினாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்று சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரகடனத்தை வெளியிட மறுக்கலாம். பாராளுமன்றம் நிறைவேற்றிய நம்பிக்கையில்லாப் பிரேரணையையே ஏற்றுக்கொள்ள மறுத்தவர். அதன்பின் உயர்நீதிமன்றம் சென்றுவர காலஅவகாசம் இருக்காது.
மறுபுறம் சஜித்தையும் கோட்டாவையும் ஆதரிக்கும் பா உ க்கள் சம்மதிப்பார்களா? அவர்களைச் சம்மதிக்கவைக்க காலஅவகாசம் தேவை.
அடுத்தது; எதிர்கால நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியின் அதிகாரங்கள் எவை? முக்கியமாக எதிர்கால ஜனாதிபதியை நியமிப்பது பிரதமரா? பாராளுமன்றமா? ( 72ம் ஆண்டு யாப்பில் பிரதமரே நியமித்தார் - பிரிவு 25) போன்ற விடயங்களைப் பேசித்தீர்மானிக்க அவகாசம் தேவை.
பாராளுமன்றத் தேர்தல்முறையையும் மாற்ற முற்படலாம். தற்போதைய முறையின்கீழ் எந்தக் கட்சியும் இலகுவில் அறுதிப்பெரும்பான்மை பெறமுடியாது. ஜனாதிபதி ஆட்சிமுறை அரசுக்கு ஸ்த்திரத்தன்மையை வழங்குகிறது. அப்பதவி ஒழிக்கப்படும்போது ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் தேர்தல்முறை மாற்றப்பட வேண்டும்; என்ற கருத்து அவர்களிடம் ஏற்கனவே இருக்கிறது. ( இங்குதான் சிறுபான்மைகளுக்கு பிரதான ஆபத்து இருக்கின்றது) எனவே இவைகளைத் தீர்மானிக்க காலஅவகாசம் தேவை. இந்தப்பின்னணியில்தான் தேர்தலை ஒத்திவைக்க முற்படுகிறார்கள்.
தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?
உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியது, பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புத் தேவை; குறைக்கும்போது மீண்டும் அதே மக்களிடம் செல்வதால் தேவையில்லை; என்பதாகும். ஏனெனில் பதவிக்காலத்தை நீடிப்பதென்பது மக்கள் ஆணைக்கப்பால் செல்கிறது . அது சரத்து மூன்றில் கூறப்பட்ட வாக்குரிமையைப் பாதிக்கின்றது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு தேவை.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள். அதனை இன்னுமொரு ஆறு மாதங்கள் நீடிப்பதாயினும் கண்டிப்பாக சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. தேர்தலை ஆறு மாதம் ஒத்திப்போடுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த முடியுமா? அதற்காக பல நூறு கோடி ரூபாய்களை செலவுசெய்ய முடியுமா? அது பாரிய விமர்சனத்தைக் கொண்டுவராதா?
இந்தப்பின்னணியில் சர்வஜன வாக்கெடுப்பின்றி அவசர அவசரமாக 2/3 ஆல் மாத்திரம் தேர்தலை ஒத்திப்போட ஒரு முயற்சி நடைபெறலாம். இதனால்தான் சில சிறுபான்மைக் கட்சிகள் உசாரடைந்திருக்கிறார்கள்.
சாதாரண சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பின்றி தேர்தலை ஒத்திப்போடவே முடியாது. ஆனால் 19வது திருத்தத்தில் இன்னுமொரு தவறு நடந்திருக்கின்றது. அது சிலவேளை வேண்டுமென்றே விடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த தவறு ஒத்திப்போடுவதில் பிரதான பங்குவகிக்கலாம்.
மேலே கூறப்பட்ட சரத்து 83(b), 19 வது திருத்தத்துக்கு முன் பின்வருமாறு கூறியது: அதாவது, சரத்து 30(2)ஐ அல்லது 62(2) ஐ ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அல்லது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்குமேல் நீடிப்பதற்காகத் திருத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்; எனக் கூறியது.
அப்பொழுது “ஆறு வருடத்திற்குமேல்” எனக் கூறியதற்கான காரணம் அப்போது ஜனாதிபதியின்/ பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு வருடமாகும். எனவே, அதற்குமேல் செல்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை.
இப்பொழுது பதவிக்காலம் ஐந்து வருடமென்பதால் இது ஐந்து வருடங்களுமேல் நீடிப்பதாயின் வாக்கெடுப்புத்தேவை; எனத் திருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இச்சரத்து திருத்தப்படவில்லை. இப்பொழுதும் “ஆறு வருடத்திற்குமேல்” என்றுதான் இருக்கின்றது.
இதில் 30(2) ஐ பதவியை நீட்டுவதற்கு ( வாக்கெடுப்பின்றி) திருத்தமுடியாது; என்றுதான் இருந்தது. இப்பொழுது 30(2)/62(2) ஐத் திருத்தி ஐந்தாக குறைத்து விட்டார்கள். ஆனால் 83(2) ஆறை ஐந்தாக குறைக்கவில்லை. இது ஒரு தவறாக இருக்கலாம்; அல்லது வேண்டுமென்றே விடப்பட்டிருக்கலாம்.
காரணம், இவற்றைக்கூறுகின்ற 83 ஐத் திருத்துவதற்கும் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்று கூறப்பட்டிருக்கின்றது.
30(2)/62(2) இற்கும் 83 இற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் பற்றி 83 இல் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 30(2)/62(2) ஐ பதவியை நீட்டுவதற்காக வாக்கெடுப்பின்றி திருத்தமுடியாது; என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைப்பதற்காக அல்லது அடியோடு திருத்தக்கூடாது; எனக் குறிப்பிடப்படவில்லை.
எனவே, பதவியைக் குறைப்பதற்காக 30(2) ஐயும் 62(2)ஐயும் திருத்திவிட்டார்கள். 83 அப்படியல்ல. அதில் 83 ஐத் திருத்தக்கூடாது; என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது. எனவே, 83 இல் உள்ள “ஆறு” என்ற சொல்லை “ஐந்து” என்று மாற்றினால் 83 ஐத் திருத்தியதாகிவிடும்; சர்வஜன வாக்கெடுப்பின்றி திருத்தமுடியாதே, என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம்.
இப்பொழுது எழுகின்ற கேள்வி 83(2) இல் ஆறு வருடங்களுக்குமேல் வாக்கெடுப்பின்றி நீடிக்கக்கூடாது; என்றுதான் இருக்கின்றது. எனவே, இன்னுமொரு ஆறு மாதம் நீடிப்பது இச்சரத்திற்கு முரணாகாது; என்ற அர்த்தத்தை எடுக்கமுடியாதா? இது அவர்களால் முன்வைக்கக்கூடிய ஒரு வாதம். ( Literal interpretation).
எதிர்வாதம்
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் எனும்போது “ ஆறு வருடம்” என்பது அந்த இடத்தில் எவ்வாறு பொருத்தும். இங்கு “ ஆறு வருடம்” என்பது “ நீடிக்கப்படுதல்” என்பதற்குரிய அடைமொழி மாத்திரமே”. இங்கு “ ஆறு” என்ற சொல்லிற்கு நேரடியான எண்கணித வியாக்கியானம் பொருந்தாது. இதற்கு இயற்கையான அல்லது சூழ்நிலைக்கேற்ற ( contextual) வியாக்கியானமே வழங்கப்பட வேண்டும்.
அதாவது “ ஆறு வருடங்களுக்குமேல் நீடிக்கப்படக்கூடாது” என்பதில் உள்ள “ ஆறுவருடங்களுக்குமேல்” என்ற அடைமொழியை “ ஜனாதிபதியின் பதவிக்காலம் எதுவோ அதற்குமேல் நீடிக்கக்கூடாது” என்றே வியாக்கியானப்படுத்த வேண்டும். சுருங்கக்கூறின் “ ஆறு” என்பது “ ஐந்து” என்று வாசிக்கப்பட வேண்டும்.
இதற்கு வலுச்சேர்க்கும் இன்னுமொரு வாதம், இவ்வாறான ஒரு திருத்தம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் கொண்டுவந்தால் அப்பொழுது மக்கள் ஐந்து வருடங்களுக்களுக்கே ஆணை வழங்கியிருப்பார்கள். அந்நிலையில் மக்கள் ஆணையின்றி இன்னுமொரு ஆறு மாதம் நீடிக்கமுடியுமா? அது மக்கள் ஆணையை மீறியதாகும்.
அவ்வாறு மீறினால் அது சரத்து மூன்றில் கூறப்பட்ட “ வாக்குரிமையைப்” பாதிக்கும். அவ்வாறு பாதிக்குமானால் சர்வஜன வாக்கெடுப்பு தேவை. எனவே, சரத்து 83ம் சரத்து 3 ம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாக இருக்கமுடியாது. இரண்டும் ஒன்றுக்கொன்று இசைவுடையதாக இருக்கவேண்டுமானால் “ ஆறு வருடம்” என்பது “ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு மேலதிகமாக “ என்பதையே அடையாளப்படுத்துகின்றது; என பொருள் கொள்ளப்படல் வேண்டும்.
நீதிமன்றம் சிலசமயங்களில் “May” என்ற சொல்லை “ Shall “ என்று அந்த இடத்திற்கேற்றாற்போல் வியாக்கியானப்படுத்துவதுபோன்று இங்கு “ ஆறு” என்பது “ ஐந்து” என்றே வியாக்கியானப்படுத்தப்படவேண்டும்.
மறுவார்த்தையில் கூறுவதானால் 83(2) இன் அடிப்படை 30(2)/62(2) ஐ, பதவிக்காலத்தை நீடிப்பதற்காக வாக்கெடுப்பின்றி திருத்த முடியாது; என்பதே! அப்போதைய பதவிக்காலம் ஆறு வருடம் என்பதால் அது அப்போதைய பதவிக்காலத்தைக் குறித்ததேதவிர வெறும் எண்கணித கணக்கைக் குறிக்கவில்லை.
மறுவாதம்
சரி, அவ்வாறு “ஆறை” ஐந்து என எடுத்துக்கொண்டாலும் இந்த ஜனாதிபதிக்கு ஆறு வருடங்கள் மக்கள் ஆணை கிடைத்ததே! எனவே, இந்த ஜனாதிபதியின் பதவியை இன்னும் ஆறுமாதம் நீடிப்பது சரத்து 3 இற்கெதிரானதல்லவே! என மறுவாதத்தை முன்வைக்கலாம். இது வலுவான ஓர் வாதம்.
எதிர்வாதம்
83(2) ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பை மாத்திரம் குறிப்பிடவில்லை. அது 62(2) ஐயும் குறிப்பிடுகின்றது. அதாவது பாராளுமன்ற பதவிக்கால நீடிப்பும் ஆறு வருடங்களுக்குமேல் செய்யமுடியாது; என்றுதான் கூறுகின்றது. தற்போதைய பாராளுமன்றத்திற்கு மக்கள் ஐந்து வருடங்களுக்கே ஆணை வழங்கியிருக்கின்றார்கள். எனவே, அந்த “ஆறு” என்ற சொல்லை “ஆறு” எனக்கொண்டு பாராளுமன்ற பதவிக்காலத்தை இன்னுமொரு ஆறு மாதம் நீடித்தால் அது மக்கள் ஆணையை மீறதா? சரத்து 3 ஐப் பாதிக்காதா?
சரத்து 83(2) இல் வருகின்ற “ ஆறு வருடங்கள் “ எனும் சொற்றொடரை ஒரே சமயத்தில் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்க “ ஐந்து” என்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க “ ஆறு” என்றும் வியாக்கியானப்படுத்த முடியுமா?
எனவே, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மாத்திரமே. அதை ஒரு நாளால் அதிகரிப்பதென்றாலும் 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை.
சிலவேளை
இந்த ஜனாதிபதி ஆறு வருடத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றம் அதனை ஐந்து வருடமாக குறைத்தது. இன்று அதே பாராளுமன்றம் அதை இன்னுமொரு ஆறு மாதங்களால் நீட்டுவது மக்கள் ஆணைக்கு முரணல்ல. எனவே, இந்த ஜனாதிபதிக்கு மட்டும் ஒரு இடைக்கால ஏற்பாடாக இப்பதவி நீடிப்பை வழங்கலாம்; என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றம் சிலவேளை ஏற்றுக்கொண்டால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அது சிறுபான்மைகளுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழருக்கும் பாரிய ஆபத்தாக வந்துமுடியும். தற்போது இருக்கின்ற இரு வகைப்பாதுகாப்பும் இழக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
அதாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் சிறுபான்மைகளுக்கு இருக்கின்ற பலம் இல்லாமலாகிவிடும். ஜனாதிபதி முறைமையில் சிறுபான்மைகளுக்கு சில சாதகங்களும் சில பாதகங்களும் இருக்கின்றன. ( அவற்றை இன்னுமொரு ஆக்கத்தில் பார்ப்போம்).
தற்போதைய பொதுத்தேர்தல் முறைமை சிறுபான்மைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒருபுறம் நமது விகிதாசாரத்திற்கேற்ப அண்ணளவாக ஆசனங்களைப்பெற உதவுகிறது.
மறுபுறம், எந்தவொரு தேசியக்கட்சியும் அதிகமான சந்தர்ப்பங்களில் சுயமாக பெரும்பான்மை பெறமுடியாத நிலையில் பாரியதொரு பேரம்பேசும் சக்தியை அது சிறுபான்மைகளுக்கு வழங்குகிறது.
“ யானையின் பலம் யானைக்குத் தெரிவதில்லையாம் அது இறக்கும் நேரம் வரும்வரை”, என்பதுபோல் நமது கட்சிகளுக்கு இந்தப்பலம் புரியாதது அல்லது புரிந்தும் அதனை தம்சொந்த நலனுக்காக மட்டும் உபயோகிப்பது என்பது நாம் பொருத்தமான தலைமைத்துவத்தை/ பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்யத்தவறுவதால் ஏற்படும் துரதிஷ்ட நிலையாகும்.
மறைந்த தலைவரைப்போன்று தகுதியான தலைமைத்துவம் அமையுமானால் இம்முறையின்கீழ் நமது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். நமது கையாலாகாத்தனம் வேறு. ஆனால் இத்தேர்தல்முறை மாற்றப்படுமானால் இந்தியாவை விடவும் மோசமான நிலைக்கு சிறுபான்மை பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தள்ளப்படலாம்.
எனவே, இவ்விடயத்தில் சிறுபான்மைகள், குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
0 comments :
Post a Comment