Sunday, September 1, 2019

இரு வாரங்களுக்கு ரணில் - சஜித் போர் நிறுத்தம்!

இரண்டு வாரங்களுக்கு ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் முடிவுசெய்துள்ளதாக அறிய வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதித் தலைவர் சஜித் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவர் ஒன்றுகூடிக் கலந்தாலோசித்த போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்காகக் கலந்தாலோசிப்பதற்காக சிரேஷ்ட அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளனர்.

இரண்டு வாரங்கள் முடியும் வரை கூட்டங்கள் நடாத்தாதிருப்பதற்கும், ஒருவரை ஒருவர் விமர்சிக்காதிருக்கவும், ஜனாதிபதிர் தேர்தல் பற்றியும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிப் பேசாதிருக்கவும் இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பில் மேலதிக விபரங்களை ஆராய்வதற்காக எதிர்வரும் 06 ஆம் திகதி இரு தரப்பினரும் மீண்டும் ஒன்றுகூடவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன, அமைச்சர் ஹர்ஷ த சில்வா ஆகியோர் சென்ற வியாழக் கிழமை இரவு இரகசிய முறையில் சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பு இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்திருந்ததுடன், அங்கு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தேசிய ஜனநாயக முன்னணியின் தோற்றம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்புகின்ற, தேர்தலில் வெற்றியீட்ட முடியுமான ஒருவரை முன்னணியிலிருந்து தெரிவுசெய்ய வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெளிவுறுத்தியுள்ளார். அதற்காகத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, முன்னணியை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக பலமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment