Saturday, September 28, 2019

ஸ்ரீ லங்காவில் 700 அமெரிக்கப் படையினர். கொண்டுவந்த வெடிமருந்துகளுக்கு என்ன நடந்தது?

அமெரிக்கப்படையினர் சுமார் 700 பேர்வரை இலங்கையில் தங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் சிறப்புரிமையுடனேயே இவர்கள் இவ்வாறு நாட்டினுள் புகுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இவர்களில் சில படையினர் அண்மையில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அவர்கள் எடுத்துச்சென்ற பொதிகளை ஹோட்டல் பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட முற்பட்டபோது அதனை சோதனையிட மறுப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்கப்படையினரின் மறுப்பை தொடர்ந்து ஹோட்டலினுள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் அங்கு விரைந்த அமெரிக்க தூதரக வாகனங்கள் அப்பொதிகளை எடுத்துச் சென்றுள்ளது.

இவ்விடயமானது இலங்கையின் பாதுகாப்பு விவகாரத்தில் பாரிய அச்சுறுத்தலையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. குறித்த பொதிகளில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் நிச்சயமாக வெடிமருந்துகள் அல்லது யுத்த உபகரணங்களாகவே இருக்கவேண்டும் எனக்கருதப்படுவதுடன், இவை ஹோட்டலுக்கு எதற்காக கொண்டுவரப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

எடுத்துவரப்பட்ட அப்பொதிகளில் வெடிபொருட்கள் அல்லது யுத்த உபகரணங்கள் எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் அவை ஹோட்டலில் வைத்து ஏதோ ஒரு தரப்பிடம் கைமாற திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படும் அதேநேரம். அது யாரிடம் கைமாற உத்தேசமாகியிருக்கலாம் என்ற கேள்விகளுக்கும் பதில் தேடப்படுகின்றது.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில்கூட அமெரிக்காவின் சதி இருந்திருக்கின்றது என சந்தேகங்கள் நிலவிவந்தநிலையிலேயே இவ்விடயம் தற்போது இடம்பெற்றுள்ளது. அதாவது தாங்கள் நுழையவிரும்புகின்ற நாடுகளினுள் உள்நாட்டு நிலவரங்களை சீர்குலைத்து அதற்கு தீர்வு தேடுகின்ற சமாதான தேவதைகளாக தம்மை காட்டிக்கொள்ளும் மகா ராஜதந்திரத்தின் மறுமுகம் இன்று உலக அரங்கில் அம்பலமாகிவருகின்றது.

எது எவ்வாறாயினும் இலங்கையினுள் அமெரிக்க படைகளின் நுழைவு நாட்டுக்கு உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலையும் பின்னடைவையும் கொடுக்கப்போகின்றது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment