ஹபரணை ஹிரிவடுன்ன வனப்பகுதியில் இருந்து இன்று (28) மதியம் மேலும் இரண்டு உயிரிழந்த காட்டு யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தற்போதைய நிலையில் 7 உயிரிழந்த யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் 4 உயிரிழந்த யானைகளின சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஒரு காட்டு யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சீகிரியா வனவிலங்கு அதிகாரிகள், இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த பகுதியில் மேலும் காட்டு யானைகளின் சடலங்கள் உள்ளனவா என தேடும் பணியை தொடர்ந்தனர்.
இதன்போது, வனப்பகுதியில் இருந்து மேலும் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், யானைகளின் பிரேத பரிசோதனைக்காக வனவிலங்கு கால்நடை வைத்தியர் வருகை தந்தருந்த போதும் உயிரிழந்த யானைகளின் குட்டிகள் அதற்கு இடமளிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னர், குறித்த காட்டு யானைகளை காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முதல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 7 யானைகளும் பெண் யானைகள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த காட்டு யானைகளை பார்ப்பதற்காக பிரதேசவாசிகள் மற்றும் அநேகமான சுற்றுலாப்பயணிகளும் ஹபரணை வனப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த காட்டு யானைகள் கொலை செய்யப்படுவது தமக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment