Thursday, September 12, 2019

கோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே...! சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு!

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியும் என, நாடளாவிய ரீதியல் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் சிசிர பின்னவல குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின்ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடும்போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால், அவர் மூன்றாவது இடத்தையே பெறுவார் என்றும் பேராசிரியர் பின்னவல குறிப்பிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சேர்ந்த குழுவொன்றினால், வாக்காளர்களை 08 வலயங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும், கோத்தபாயவுக்கு சரிநிகராக 07 வலயங்களில் மக்கள் ஆதரவு உள்ளது தெளிவாகியுள்ளதாகவும், சஜித் பிரேமதாசவுக்கு 04 வலயங்களில் மட்டுமே ஆதரவு உள்ளது தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கேற்ப கொழும்பு மாநகர சபை, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, மஹரகம, கோட்டை, உள்ளிட்ட தொழிற்பேட்டை, கண்டி, காலி, மாத்தறை, குருணாகலை உள்ளிட்ட நகர்ப் பிரதேசங்கள், தென் மற்றும் வட மேல் மாகாணம், வட மத்திய மாகாணம், கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட கிராமிய பெளத்த வலயங்கள், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வட மேல் மாகாணத்தின் வட பகுதி உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள பகுதிகள், வடக்கு கிழக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள், கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள், நாட்டின் உட்பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகள், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் என்பன இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ராஜகிரியில் அமைந்துள்ள நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் பிரதான அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பின்னவல அவ்வாறு தெரிவித்தார்.

காெழும்பு மாநகர எல்லைப் பிரதேசம், நாட்டில் அபிவிருத்தியடைந்துவரும் பிரதேசங்கள், தோட்டங்கள், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழ்ப் பிரதேசங்கள், தெற்கில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசங்கள் என்பவற்றில் கரு ஜயசூரிய வெற்றிபெற முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com