Friday, August 9, 2019

சஹ்ரானின் பயங்கரவாத செயலால் முற்றாக பாதிக்கப்பட்டவன் நான். மனைவியை பறிகொடுத்த சாய்தமருது இளைஞன்.

தீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் என சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர் என்பவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

கடந்த 85 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுதலையான ஜாசிர் என்பவர் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஏப்ரல் 26 சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவித சூழ்நிலை நேரத்தில் மனைவியின் சகோதரிகளை பார்க்கச் சென்ற போது தான் நான் உட்பட மனைவி (இறந்துவிட்டார்) தாய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை உள்ளிட்டோர் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த நிலையில் இராணுவ உடைய அணிந்தவர்களால் சுடப்பட்டோம்.இவ்வாறு சுட ஆரம்பிக்கின்ற போது நான் எனது அடையாள அட்டையை காட்டி தமிழ் மற்றும் சிங்களத்தில் கத்திய போதும் சுட்டுக்கொண்டே இருந்தார்கள்.

சம்பவ தினம் நானும் எனது மனைவியும் எனது அம்மாவின் வீட்டில் தங்கி இருந்தோம். மாலை 7:10 மணியளவில்மனைவியின் தாயார்(மாமி) தொலைபேசி மூலம் அழைத்து தாங்கள் வசிக்கும்
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று உள்ளதாகவும் இதனால் அங்குள்ள தங்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என எனது மனைவிக்கு கூறினார் .


இந்த நேரத்தில் தான் தனது தங்கைகளை உடனடியாக பார்க்கவேண்டும் தாயை பார்க்க வேண்டும் என மனைவி அஸ்ரிபா விடாப்பிடியாக கூற எனது மனைவி எனது தாயார் எனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியையும் அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் சென்றேன். அப்போது நீங்கள் ஏன் வந்தீர்கள் திரும்பிச் செல்லுங்கள் இங்கே குண்டு வெடித்துள்ளது என மாமியார் கூற அவ்விடத்திலேயே நாங்கள் மீண்டும் திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம்.

அவ் வேளையில் பல வெடி சத்தங்கள் துப்பாக்கி சூட்டு வேட்டுக்கள் கேட்டன. முச்சக்கரவண்டி மூலம் நாம் எமது தாயின் வீட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருக்கும் போது தான் இராணுவத்தினர் எம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.அவ்வேளை நான் எனது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு உயர்த்தியவாறு சுட வேண்டாம் என கூறினேன். அப்போது எனது காலில் சூடு பட்டது. பின்னர் இறங்கி முச்சக்கரவண்டியை வீதி ஓரமாக தள்ள முற்படும் போது எனது மனைவி எவ்வித உணர்வும் இன்றி இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தாள். அவரின் தலையில் இருந்து இரத்தம் வெளியேறி கொண்டிருந்தது.
அவ்வேளை அவளை காப்பாற்றுமாறு கூறினேன்.அது மாத்திரமன்றி எனது தாயார் எனது சகோதரியும் சிறு சூட்டு காயங்களுக்கு உட்பட்டிருந்தனர் . இராணுவத்தினர் உடனடியாக எனது தாய் சகோதரி என்னையும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


எனது உடம்பில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக அறிந்தேன்.சம்பவ தினம் இராணுவத்தினரோ பொலிஸாரோ எங்களை நிறுத்தசொல்லவில்லை. இராணுவத்தினர் இருளில் நின்றதை நாங்கள் காணவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் முச்சக்கரவண்டியை நிறுத்தியிருப்போம். இன்று எனது மனைவியை இழந்து நான் வாடிக்கொண்டிருக்கிறேன் இதற்கு முற்றுமுழுதான காரணத்தை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். நான் வைத்தியசாலையில் இருக்கும் போதும் தடுப்பு காவலில் இருக்கும்போதும் என்னை அரசியல்வாதிகளோ நண்பர்களோ உறவினர்களோ யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு பார்க்க வருபவர்களிடம் பல மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றும் இருக்கின்றது.இப்போது எமது சமுதாயத்தில் பலவாறு புரளிகளை பேசுகின்றனர், பரப்புகின்றனர். எனவே பாதுகாப்புத் தரப்பு வீதித் தடை அல்லது பாதுகாப்பு சமிக்கைகளை வைத்திருந்தால் எனது மனைவியின் உயிர் வீணாக போயிருக்காது. இதற்கு அரசாங்கமே பதில் கூற வேண்டும் என்று எனது மனைவியை இழந்து தனிமையில் வாடுகிறேன்.இன்று நான் எவ்வித ஜீவனோபாயம் இன்றி சிரமப்படுகின்றேன். என்னிடம் இருந்த முச்சக்கர வண்டியையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.தற்போது என்னை விசாரணை மேற்கொண்ட பொலீசார் குற்றத்தடுப்பு பிரிவினர் நான் நிரபராதி என்று கூறுகின்றனர்.தற்போது பிணையில் வந்தாலும் மீண்டும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை வந்தால் மாத்திரமே நீதிமன்றத்துக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் எனக்கு தெரிவித்துள்ளது.

எனவே எனக்கு எவராவது உதவி செய்தால் மீண்டும் எனது வாழ்க்கையை புதிப்பித்து எனது குடும்ப நிலையை பார்த்துக்கொள்வேன்.சிலர் வெளிநாட்டிற்கு அகதி அந்தஸ்து பெற்று செல்லுமாறு கூறுகின்றனர்.வெளிநாட்டில் இருக்கின்ற போது தான் எனது நாட்டின் அருமை தெரிந்தது.இலங்கை உண்மையில் சிறந்த நாடு.இந்த நாட்டையும் எனது தாயையும் எனது சகோதரியான மனநலம் பாதிக்கப்பட்டவரையும் விட்டுவிட்டு எங்கும் செல்ல மாட்டேன் என கண் கலங்கி நின்றார்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com