ரணிலின் ஆட்டம் ஆரம்பமானது! மைத்திரியுடன் இணைந்து நிறைவேற்று ஜனாதிபதிமுறைக்கு ஆப்புக்கு திட்டம்.
அரசியல் சூத்திரத்தில் ரணில் ஜாம்பவான். அவர் அரசியலில் நகர்த்துகின்ற காய்களை தடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே தடுக்கமுடியும் என்றால் அது மிகையாகது. அந்த அளவுக்கு அரசியல் சூழ்சியில் மன்னன்.
இலங்கையின் 7 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மக்கள் காத்திருக்கின்ற அதேநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தடுமாடுகின்றது. கட்சியின் தலைவராக இதுவரை காலமும் தனிமனிதனாக காய் நகர்த்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்போது பெரும் தலையிடியாக பிறேமதாஸவின் மகன் சஜித் மாறியுள்ளார்.
சஜித் பிறேமதாஸ ஜனாதிபதி வேட்பாளர் பதவியினை ரணிலிடமிருந்து பலவந்தமாக பறித்தெடுப்பதற்கு தயாராகியுள்ளார். அவர் மக்கள் பலத்தையும் கட்சியினுள் தனக்கு அபிமானத்தையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்கமீது அதீத அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றார். இந்நிலையில் பல்வேறு தடங்களைப்போட்டு இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை அறிவிக்காதிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் எனக்கு வேண்டாம் என்று சஜித் தெரிவிக்குமளவுக்கான காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு மைத்திரிபாலவை அலரிமாளிகையில் சந்தித்து பூட்டிய அறையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இங்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதாவது 19 திருத்தச்சட்டத்தின் ஊடாக கை கால்கள் உடைக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கமாக காணப்படும் ஜனாதிபதி யின் முதுகெலுப்பை உடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட்டால், ஜனாதிபதி என்பவர் ஒரு வீசேட பதவிக்குரிய பெயரளவிலானவராவே இருப்பார். அத்தருணத்தில் பிரதமரே நாட்டின் சர்வ அதிகாரம் கொண்டவராக செயற்படுவார்.
1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவே ஜே.ஆர் ஜயவர்த்தனவிற்கு பின்னர் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் ஆட்சியை கைப்பற்றினர். சந்திரிகா குமாரணதுங்க ஜேவிபியுடன் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஜனாதிபதி முறையை ஒழிக்கின்றேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஜேவிபியின் ரில்வின் சில்வாவுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால 100 நாட்களில் ஒழிக்கின்றேன் என வாக்குகளை பெற்றிருந்தார் என்பது வரலாறு.
அதாவது ஆணை பெண்ணாக்குவதை தவிர அனைத்தையும் இந்நாட்டில் என்னால் செய்ய முடியும் என ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் மார்தட்டப்பட்ட அந்த அரக்க முறையை ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் ஆணைவழங்கியுள்ளபோதும் பதவியை கைப்பற்றிய எவரும் அதனை செய்து முடிக்கவில்லை. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தன்னால் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என்ற முடிந்த முடிவை ஏற்றுக்கொண்டு விடயத்தில் இறங்கியுள்ளார்.
ரணிலின் இந்த முயற்சிக்கு மைத்திரியின் ஆதரவு கிடைக்கும்போது எதிர்கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவும் கடைக்கண்ணை காட்டிவிட்டிருப்பதற்கான சாத்திக்கூறுகள் மிகவும் அதிகமாகவுள்ளது. அதற்கான காரணம் அரசியல் யாப்பின் பிரகாரம் இருமுறைகள் மாத்திரமே ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்க முடியும். எனவே அம்முறை ஒழிக்கப்பட்டு சர்வ அதிகாரம் கொண்ட பிரதமர் முறை வந்தால் அடுத்த சர்வ அதிகாரம் கொண்டவராக தன்னால் வரமுடியும் என மஹிந்த நிச்சயமாக எதிர்பார்ப்பார்.
இவ்விடயத்திற்கு ஜேவிபி யின் முழு ஆதரவும் கிடைக்கும் என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கும். எது எவ்வாறாயினும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாகவே நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க முடியும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கான அறிவித்தல் வரலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment