ஆஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல்.
இதற்காக ஆஸ்திரேலியா 20 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
புதிய தடுப்பு முகாமிற்கு அகதிகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அதிகாரிகளின் உத்தரவு கடிதத்தை ட்வீட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
அக்கடித்தத்தில், “நீங்கள் புதிய மையத்திற்கு(முகாம்) மாற்றப்படுவதால், உங்கள் அலைப்பேசியை ஒப்படைத்தாக வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், அறையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறையிலேயே உணவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் இம்மையம் சிறையை போன்றே செயல்படும் எனக் கருதப்படுகின்றது.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்க ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்திருக்கிறார். “ஆஸ்திரேலிய அரசுக்கும் அதன் சேவை வழங்குனர்களுக்கும் இந்த நடவடிக்கையில் எந்த பங்கும் இல்லை,” என ஆஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இது புதியதொரு சிக்கலாக உருவெடுக்கும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, 2016ல் இத்தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கும் அதிகமான அகதிகள் நிராகரிக்கப்பட்டனர். அவ்வாறு, நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்ந்து பப்பு நியூ கினியா மற்றும் நவுருவிலேயே வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment