Wednesday, August 7, 2019

கைதிகளுக்கு கஞ்சா விநியோகம்! மட்டக்களப்பு சிறைச்சாலைக் காவலன் கைது!

வேலியே பயிரை மேய்கின்றது என்ற பழமொழி யாவரும் அறிந்ததானது. இலங்கையில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் நீதி மீறல்களுக்கும் காரணகர்த்தாக்களாக அவற்றை பாதுகாக்கின்றோம் என சத்தியப்பிரமானம் செய்து மாதாந்தம் கூலிவாங்குகின்றவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது என்றால் மிகையாகாது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவேண்டியவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளே எமது இன்றைய நிலைக்கு காரணமுமாகும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவேண்டிய பொலிஸ் திணைக்களதில் ஆரம்பித்து சட்டத்தை இயற்றித்தருகின்ற பாராளுமன்ற உத்தியோகித்தர்கள் வரை இந்நாட்டின் நீதி மற்றும் ஒழுங்குவிதிகள் மீறப்படுவதற்கு உடத்தையாகவுள்ளனர்.

சட்டத்திற்கு முரணாக செயற்படும் குற்றவாளிகள் சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறைச்சாலையில் அடைக்கப்படுவதன் நோக்கம் அவர்கள் நற்பிரஜைகளாக மாற்றம் பெறவேண்டும் என்பதாகும். ஆனால் இன்று இலங்கைச் சிறைச்சாலைகளுக்கு செல்கின்றவர்கள் குற்றங்களை புரிவதற்கு மேலதிக தகமைகளை பெற்றவர்களாக வெளிவருகின்றனர்.

இதற்கு காரணம் சிறைச்சாலை நிர்வாகத்தினராகும். சிறைச்சாலையினுள் இன்று தடைசெய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக கிடைக்கப்பெறுகின்றது. சிறைச்சாலையிலிருந்தவாறே நாட்டினுள் பல்வேறு கொலைகள் கொள்ளைகள் இயக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலதிகமாக போதைப்பொருள் வியாபாரிகள் தமது வியாபரத்தை மேற்கொள்ள பாதுகாப்பானதும் சிறந்ததுமான இடமாக சிறைச்சாலைகளையே தெரிவு செய்துள்ளனர். இவர்களின் இச்செயற்பாடுகளுக்கு சிறைச்சாலை காவலர் தொட்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் வரை உதவி ஒத்தாசை புரிகின்றனர். சட்டவிரோதிகளின் அடியாட்களாக இந்த அரச உத்தியோகித்தர்கள் செயற்படுகின்றனர்.

அவ்வாறு செயற்பட்ட சிறைச்சாலை காவலன் ஒருவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளான். அவன் கைதிகளுக்கு கஞ்சா மற்றும் தொலைபேசிகளை கொடுக்க முற்பட்டபோது பிடிக்கப்பட்டுள்ளான். அவனை இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com